

கோவை கிணத்துக்கடவு தொகுதி அதிமுக தேர்தல் பணிமனை திறப்பு விழா சுந்தராபுரத்தில் நேற்று நடைபெற்றது. வேட்பாளர் செ.தாமோதரன் முன்னிலை வகித்தார். பணிமனையைத் திறந்துவைத்து அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பேசியதாவது:
மு.க.ஸ்டாலின் தூங்கும்போதும்கூட என்னைப் பற்றித்தான் நினைத்துக் கொண்டிருக்கிறார். என்னைப்பற்றி பேசாமல் அவரால் இருக்கவே முடியாது, அரசியல் செய்யவும் முடியாது. தமிழக முதல்வர் பழனிசாமியுடன் ஒப்பிடும் அளவுக்கு, மு.க.ஸ்டாலினுக்கு தகுதி இல்லை. உள்ளாட்சித் துறை அமைச்சராக இருந்தபோது ஸ்டாலின் கோவைக்கு என்ன செய்திருக்கிறார்?
தமிழகத்தின் பட்ஜெட் எவ்வளவு, எத்தனை ஊராட்சிகள் உள்ளன என்பதெல்லாம்கூட தெரியாமல், எழுதிக் கொடுப்பதைப் படிப்பவர் ஸ்டாலின். எல்இடி விளக்குகளைப் பற்றி ஸ்டாலினுக்கு என்ன தெரியும்? எல்இடி விளக்குகள் மாற்றப்பட்டதால் அரசுக்கு ஆண்டுக்கு ரூ.400 கோடி சேமிக்கப்படுகிறது.
எந்தக் காலத்திலும் மு.க.ஸ்டாலின் முதல்வராக முடியாது. இந்த தேர்தலிலும் அதிமுக வெற்றி பெற்று, மீண்டும் கே.பழனிசாமி முதல்வராவது உறுதி. தொண்டாமுத்தூர் தொகுதியில் போட்டியிட ஆள் இல்லாததால், காங்கயத்தில் இருந்து ஒருவரை வரவழைத்துள்ளனர். வாக்குப்பதிவுக்குப் பிறகு அவரும், உடன் வந்தவர்களும் திரும்பிப்போய்விடுவார்கள்.
திமுக ஆட்சியில் கோவையில் பல சொத்துகளை மிரட்டி அபகரித்தனர். அதிமுக ஆட்சியில்ஆள் கடத்தலோ, நில அபகரிப்போ, கட்டப்பஞ்சாயத்தோ கிடையாது. திமுகவினர் மீண்டும் ஆட்சிக்கு வந்தால், நிலங்கள் அபகரிக்கப்படும். இவ்வாறு அவர் பேசினார்.