

மத்திய அரசு பல்வேறு நலத்திட்டங்களை வழங்கி வருவதால், உள்கட்டமைப்பு மேம்பாட்டில் நாட்டிலேயே தமிழகம் முதலிடத்தில் உள்ளது என மத்திய சாலை போக்குவரத்துத் துறை இணை அமைச்சர் வி.கே.சிங் தெரிவித்தார்.
தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறு சட்டப்பேரவைத் தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் பூண்டி எஸ்.வெங்கடேசனுக்கு தேர்தல் பணியாற்றும் நிர்வாகிகளின் ஆலோசனைக் கூட்டத்தில் நேற்று பங்கேற்ற அவர், பின்னர் செய்தியாளர்களிடம் கூறியது:
தமிழகத்தில் பாஜகவின் தேர்தல் பணிகளை ஆய்வு செய்யவே வந்துள்ளேன். மத்திய பாஜக அரசு வழங்கி வரும் மக்கள் நலன் சார்ந்த திட்டங்களை மக்களுக்கு தெரியப்படுத்த வேண்டும் என்பதே எங்கள் பிரச்சாரத்தின் நோக்கம்.
அதிமுக, பாஜக கூட்டணிக்கு மிகப்பெரிய ஆதரவு உள்ளது. இரு கட்சிகளுமே மக்களின் நலனுக்காகப் பாடுபடுகின்றன. எம்ஜிஆர் காலம் முதல் இதுவரை ஏழைகளின் முன்னேற்றத்துக்காகவே அதிமுக பாடுபடுகிறது. பாஜகவின் கொள்கையும் இதுதான். அதனால்தான் அதிமுகவை ஆதரிக்கிறோம்.
தமிழகத்துக்கு மத்திய அரசு பல்வேறு நலத் திட்டங்களை வழங்கியுள்ளது.
இதன் காரணமாக, இந்தியாவிலேயே கரோனா தடுப்புப் பணி, உள்கட்டமைப்பு மேம்பாடு, தொழில்முனைவோருக்கான மேம்பாடு போன்ற பல்வேறு துறைகளில் தமிழகம் முதலிடத்தில் உள்ளது.
தமிழக மக்களின் மேம்பாட்டில் மத்திய அரசு உறுதியாக உள்ளது. தமிழகத்தின் வளர்ச்சிக்காக, கடந்த 6 ஆண்டுகளாக ரூ.6.50 லட்சம் கோடியை வழங்கியுள்ளது. இதில், ரூ.25 ஆயிரம் கோடி மீனவர்களின் வளர்ச்சிக்காக வழங்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி மீண்டும் வெற்றி பெற்று ஆட்சிக்கு வந்ததும், புறவழிச்சாலை அமைப்பது, பாலங்கள் கட்டுவது உள்ளிட்ட திருவையாறு தொகுதி மக்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும்.
மக்கள் நலனில் அக்கறை கொண்டுள்ள எங்களின் கூட்டணி மீண்டும் வெற்றிபெற மக்கள் ஆதரவு அளிப்பார்கள் என்றார்.