

திருச்சியில் நூறாண்டுகளாக எந்தவிதமான ஆடம்பரமோ, ஆரவாரமோ இல்லாமல் சத்தமே இல்லாமல் அன்னதான சேவையில் ஈடுபட்டு வருகிறது திருச்சி அன்னதான சமாஜம் என்ற அமைப்பு.
நூறாண்டுகளுக்கு முன்னர் திருச்சி நீத்துக்காரத் தெருவில் வாழ்ந்த பரமசிவம் பிள்ளை தினந்தோறும் காலையில் ஏழை களுக்கு தன் வீட்டிலேயே பழைய சோறு அளித்து வந்தார். அதனாலேயே அவர் பழைய சோறு பரமசிவம் பிள்ளை என்று கூட அழைக்கப்பட்டார். இவர் 1909-ம் ஆண்டில் மறைந்தார்.
உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே…
பரமசிவத்தின் பணியை முன்னுதாரணமாகக் கொண்டு 1912-ம் ஆண்டில் நந்தி கோயில் தெருவில் அன்னதான சமாஜம் என்ற பெயரில் ஏழைகளுக்கு தினந்தோறும் அன்னதானம் வழங்கும் பணியை சிலர் சேர்ந்து தொடங்கினர். இதனை முன்னின்று நடத்தியவர் ஏ.எம்.சந்திரசேகரம் பிள்ளை. உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே என்ற முழக்கத்துடன் பரமசிவம் பிள்ளையின் உருவப்படம் சமாஜத் தின் முன் வைக்கப்பட்டது. இதனால் ஈர்க்கப்பட்ட பலரும் சமாஜத்தில் தங்களை இணைத்துக் கொண்டனர். தொடர்ந்து சமாஜம் 29.1.1917-ம் ஆண்டில் முறைப்படி பதிவு செய்யப்பட்டது.
1.4.1922 முதல் பிடி அரிசித் திட்டத்தின் மூலம் கிடைத்த அரிசியையும், உண்டியலில் கிடைத்த தொகையையும் கொண்டு அன்னதானம் அமோகமாக நடைபெற்றது. அன்னதானம் வழங்கும் பணி அதிகமானதால், பட்டர்வொர்த் சாலையில் உள்ள திருச்சி மாநகராட்சிக்கு (அப்போது நகராட்சி) சொந்தமான இடம் 1932-ம் விலையின்றி, உரிமைப் பொருளாக சமாஜத்துக்கு வழங்கப் பட்டது. இதில் பலரும் அளித்த நன்கொடையால் கட்டிடங்கள் கட்டப்பட்டு, திருமணம் உள்ளிட்ட பொது நிகழ்ச்சிகளுக்கு பயன் படுத்த குறைந்த வாடகைக்கு அளிக்கப்படுகிறது.
இதுதவிர தாராள மனம் படைத்த பலரும் இந்த சமாஜத்துக்கு வீடு, நிலம் உள்ளிட்டவைகளை எழுதி வைத்துள்ளனர். பலரும் தங்களது பிறந்தநாள், குழந்தைகளின் பிறந்த நாள், திருமண நாள், சஷ்டியப்தப்பூர்த்தி, சதாபிஷேக விழா, நீத்தார் நினைவு நாள் உள்ளிட்ட பல்வேறு நிகழ்வுகளில் அன்னதான சமாஜத்துக்கு வந்து நிதியை அளித்து, அன்றைய தினம் அன்னதானத்தையும் வழங்குகின்றனர். இவ்வாறாகத் தான் நூறாண்டுகளைக் கடந்த நிலையிலும் தொடர்ந்து இந்த சமாஜம் உணவளிக்கும் பணியை தினந்தோறும் மேற்கொண்டு வருகிறது.
ஒரு ரூபாய் நன்கொடைக்கும் ரசீது…
இந்த சமாஜத்தின் செயல் பாடுகள்குறித்து அதன் செயலர் டாக்டர் சி.கேசவராஜ் கூறியதாவது:
“யார் வேண்டுமானாலும், எவ்வளவு வேண்டுமானாலும் நிதி வழங்கலாம். நாங்கள் யாரிடமும் இவ்வளவு கொடுங்கள் என்று கேட்பதில்லை. ஒரு ரூபாய் கொடுத்தாலும் நாங்கள் வாங்கிக் கொண்டு, ரசீது கொடுப்போம்.
தினந்தோறும் இங்கு பசி என்று வரும் குறைந்தபட்சம் 100 பேருக்கு அன்னதானம் வழங்குகிறோம். சாம்பார் சாதம், தயிர் சாதம், புளி சாதம் மற்றும் சர்க்கரைப் பொங்கல் ஆகியவற்றில் ஏதேனும் இரு பொட்டலங்கள் அன்னதானமாக வழங்கப்படுகின்றன.
திருமண மண்டபத்தின் மூலம் கிடைக்கும் வாடகையும் அன்ன தானத்துக்கு பயன்படுத்தப் படுகிறது. இது தவிர சமாஜத்தின் சேவைகுறித்து அறியும் பலரும் நிதிகளை வழங்கி வருகின்றனர். சிலர் ஏழைகளுக்கு ஆடைகளை கூட எடுத்துத் தருகின்றனர். அவற்றையும் இங்கு வரும் ஏழைகளுக்கு வழங்குகிறோம்” என்றார் அவர்.
முதியோர் இல்லம் தொடக்கம்…
உணவும் உடையும் கொடுத்து வரும் சமாஜத்தின் பணியை மேலும் விரிவாக்கும் வகையில் முதியோர் இல்லம் ஒன்று 1992-93ம் ஆண்டில் குணசீலத்தில் தொடங்கப்பட்டது. இதைத் தொடர்ந்து, கல்லணை சாலையில் உள்ள திம்மராயசமுத்திரத்தில் ஒரு ஏக்கர் நிலத்தை உஷா கருணாநிதி என்பவர் தானமாக அளித்தார். இந்த இடத்தில் முதியோர் இல்லம் தற்போது செயல்பட்டு வருகிறது. இங்கு முற்றிலும் வசதியற்ற ஏழை, ஏளிய முதியவர்கள் 65 பேர் (ஆண்கள், பெண்கள்) தங்க வைக்கப் பட்டுள்ளனர். இவர்களுக்கு மூன்று வேளை உணவு, உடை, உறைவிடம் ஆகியவை அளிக்கப்பட்டுள்ளன.
சமாஜத்தின் தலைவர் டாக்டர் வி.கனகராஜ் வாரந்தோறும் இங்குள்ள முதியவர்களுக்கு மருத்துவப் பரிசோதனையை மேற்கொண்டு வருகிறார்.
ஒரு சிலர் பெரிய மேடையைப் போட்டு, எப்போதாவது ஒரு சிலருக்கு உதவிகளை அளித்து விட்டு, அதை புகைப்படம் எடுத்து விளம்பரம் தேடிக் கொள்ளும் இந்த காலத்தில் எவ்வித ஆரவாரமோ, ஆடம்பரமோ, விளம்பரமோ இல்லாமல் உணவு, உடை, உறைவிடம் உள்ளிட் டவைகளை வழங்கும் திருச்சி அன்னதான சமாஜத்தின் சேவையை பாராட்டாமல் இருக்க முடியாது.
இயன்றவர்கள் இதுபோன்ற நற்காரியங்களுக்கு உதவிகளைச் செய்து அந்த பணி மேலும் சிறப்புற நடைபெற உறுதுணையாக இருக்க வேண்டும் என்பதுதான் அனைவரதும் விருப்பம்.