

இதுவரை பணியே தொடங்காமல் எய்ம்ஸ் பெயரைச் சொல்லி ஏமாற்றுகிறார்கள் என்று மு.க.ஸ்டா லின் பேசினார்.
மதுரை கிழக்குத் தொகுதி திமுக வேட்பாளர் பி.மூர்த்தி, உசிலம்பட்டி திமுக கூட்டணி வேட்பாளர் கதிரவன், சோழவந்தான் திமுக வேட்பாளர் வெங்கடேசன், திருமங்கலம் திமுக வேட்பாளர் மு.மணிமாறன், மேலூர் காங்கிரஸ் வேட்பாளர் ரவிச்சந்திரன், திருப்பரங்குன்றம் மார்க்சிஸ்ட் வேட்பாளர் பொன்னுத்தாய் ஆகியோரை ஆதரித்து திருமங்கலம் பேருந்து நிலையம் அருகே திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நேற்று இரவு பிரச்சாரம் செய்தார். அப்போது அவர் பேசியதாவது:
பிரதமர் மோடியும், முதல்வர் பழனிசாமியும் மக்களை ஏமாற்றி வருகின்றனர். இவர்கள் தமிழ்நாட்டுக்கு எந்த நன்மையும் செய்ய மாட்டார்கள். இந்தியாவில் 15 எய்ம்ஸ் மருத்துவமனைகள் தொடங்கப்படும் என பிரதமர் மோடி அறிவித்தார். மற்ற 14 மாநிலங்களில் எய்ம்ஸ் மருத்துவமனைகளில் பணிகள் முடிந்துள்ளன. தமிழ் நாட்டில் இன்னும் பணியே தொடங்கவில்லை. தமிழ்நாட்டுக்கு இதுவரை நிதியும் ஒதுக்கவில்லை. கேட்டால் ஜப்பானிடம் நிதி கேட்டுள்ளோம் என்று ஏமாற்றுகின் றனர். ஒருங்கிணைந்த பேருந்து நிலையம், பாதாளச் சாக்கடை, திருமங்கலம் பிரதானக் கால்வாய், துணைக்கோள் நகரம் உருவாக்குவேன் எனக் கூறிய அமைச்சர் உதயகுமார் எதையும் செய்யவில்லை. தமிழகத்தில் அடிமை ஆட்சியை அகற்ற வேண்டும். தமிழகத்தில் பாஜக ஒரு இடத்தில் கூட ஜெயிக்காது என்பது தெரிந்ததுதான். ஏதாவது தில்லுமுல்லு செய்ய முடியுமா என்று மோடியும், அமித்ஷாவும் திட்டமிடுகின்றனர். தமிழ்நாட்டில் அவர்களது தில்லுமுல்லு எடுபடாது.
பச்சைத் துண்டு போட்டு விவசாயிகளுக்கு பச்சைத் துரோகம் செய்பவர் பழனிசாமி. இனிமேல் அவர்கள் சட்டப் பேரவைக்கு வரப்போவதில்லை.
சோழவந்தான், திருப்பரங்குன் றத்தில் குளிர்பதனக் கிடங்கு, உசிலம்பட்டி, திருப்பரங்குன்றத்தில் நறுமணத் தொழிற்சாலை, திருமங்கலம் ஹோமியோபதி மருத்துவமனை மேம்படுத்தப்படும், திருப்பரங்குன்றம் சுரங்கப்பாதை அமைக்கப்படும் என பல உறுதி மொழிகள் அளிக்கப்பட்டுள்ளன.
தூங்கா நகரமான மதுரையை மீட்க, இழந்த மாநில உரிமையை மீட்க மதச்சார்பற்ற கூட்டணி வேட்பாளர்களை வெற்றி பெற வைக்க வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.