

மனிதகுலம் நவீன தொழில்நுட்பம் மூலம் நிலா, செவ்வாய் என்று ஆராய்ச்சியில் வெற்றிகண்டுள்ளது. தொடர்ந்து அறிவியலில் பல்வேறு முன்னெடுப்புகளை மேற்கொண்டு வருகிறது. தனக்கு முன்னால் உள்ள அத்தனையையும் ஆராய்ச்சி செய்த மனிதனுக்கு தன் இனத்தின் தொடக்க காலம் குறித்த ஆராய்ச்சிகள் பெரும் சவாலாகவே உள்ளது.
எந்த தொழில்நுட்பமும் இல்லாத காலத்தில் வாழ்ந்து மடிந்த மூதாதையரின் வாழ்வியல் குறித்த கேள்வியும், ஆர்வமும் இன்றளவும் தொடர்ந்து கொண்டே இருக்கிறது. இதற்கு ஆதாரமாக இருப்பது படிமங்கள், முதுமக்கள்தாழி, கற்கருவிகள், தடயங்கள் போன்றவைதான். இதன் மூலம் அவர்களின் சமூக செயல்பாடுகளை தெரிந்து கொள்ள முடிகிறது.
இதுபோன்று மீட்டெடுக்கப்பட்ட எச்சங்கள் தொல்லியல்துறை மூலம் பாதுகாக்கப்பட்டும், காட்சிப்படுத்தப்பட்டும் வருகிறது. இதற்காக தமிழகம் முழுவதும் 22 அருங்காட்சியகங்கள் அமைக்கப்பட்டுள்ளன. தேனி மாவட் டத்தைப் பொறுத்தளவில் வரலாறு சார்ந்த பல்வேறு நிகழ்வுகளின் தடங்கள் கண்டறியப்பட்டுள்ளன.
சிலப்பதிகாரத்தில் இம்மாவட்டம் சிறப்பித்து காட்டப்பட்டுள்ளது. சேர, சோழ, பாண்டியன், நாயக்கர் என மன்னர் பரம்பரையினர் பலர் ஆட்சி செய்த தளம் இது. கடமலைக்குண்டு, வெம்பூர், குத்துக்கல்தேரி உள்ளிட்ட பல பகுதிகளிலும் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு இறந்தவர்களை புதைத்த இடங்களில் வட்டவரிசை குத்துக்கற்கள் மீட்டெடுக்கப்பட்டுள்ளன.
சமணம் இப்பகுதியில் சிறப்புற்று விளங்கியதை காட்டும் வகையில் உத்தமபாளையத்தில் கிபி. 9 மற்றும் 10-ம் நூற்றாண்டைச் சேர்ந்த மகாவீரர், பார்சுவநாதர் போன்ற தீர்த்தங்கரர்களின் உருவங்கள் புடைப்புச் சிற்பங்களாக வடிவமைக்கப்பட்டுள்ளன.
இதுவரை கண்டறியப்பட்ட நடுகற்களிலேயே மிகவும் பழமை வாய்ந்த மற்றும் மொழி கலப்பில்லாத சங்க கால கல்வெட்டுக்கள் என பல்வேறு சிறப்புகளைக் கொண்ட பழம்பொருட்கள் ஆண்டிபட்டி அருகே புள்ளிமான்கோம்பையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. வாழ்வியல், ஆன்மீகம், சமூக நிலை என்று தேனி மாவட்டம் வரலாறு சார்ந்த மாவட்டமாகவே விளங்கி வருகிறது. ஆனால் பல தொல்லியல் பொருட்கள் கண்டுகொள்ளாமல் திறந்த வெளியிலே கிடப்பது வரலாற்று ஆர்வலர்களை வருத்தத்தில் ஆழ்த்தி வந்தது.
எனவே இவற்றை ஒருங்கிணைத்து அருங்காட்சியகம் அமைக்க தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர். இதனைத் தொடர்ந்து தற்போது ஆண்டிபட்டி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி விளையாட்டு மைதான வளாகத்தில் அரசு அருங்காட்சியகம் அமைக்கப்பட்டுள்ளது. மற்ற காட்சியகங்களில் இருந்து தனித்துவமாக இது விளங்கி வருகிறது.
பொதுவாக எந்த அருங்காட்சி யகத்திற்குச் சென்றாலும் பரவலான பகுதிகளில் மீட்டெடுக்கப்பட்ட வரலாற்று தடயங்களே காட்சிப்படுத்தப்பட்டி ருக்கும். ஆனால் தமிழகத்தில் முதன் முறையாக மாவட்டம் சார்ந்த தொல்லியல் பொருட்களே இங்கு பிரதானமாக இடம்பெற்றுள்ளன. சுமார் 5 ஆயிரம் சதுர அடி பரப்பளவில் இந்த அருங்காட்சியகம் நிர்மாணிக்கப்பட்டுள்ளது.
தரை மற்றும் முதல் தளத்தில் அரசியல், இயற்கை, சமூகம், இலக்கியம்-பண்பாடு, பொருளாதாரம், தொழில் வரலாறுகள் என்று 6 கூடங்களாக பிரிக்கப்பட்டுள்ளன.
விலங்குகளை கொல்வதற்கு ஆயுதங் களை பயன்படுத்தினாலும் வெட்டி கூறு போட பயன்படுத்திய கூர்மையான கற்கருவிகள், போடிமெட்டில் கிடைத்த முத்திரை நாணயங்கள், ஜமீன் கால புகைப்படங்கள், டாப்ஸ்டேஷன், குரங்கணி, சுருளிஅருவி, புலிஅருவி, மேகமலை, உள்ளிட்ட பல்வேறு சுற்றுலாத் தளங்களின் விவரங்கள், மேகலையில் உள்ள அரியதாவரங்கள், மாவட்டத்தின் முக்கிய பாறையான சார்னோகைட் பாறை வகைகள், கனிமங்கள், புதை படிமங்கள், விண்கற்கள் போன்றவை காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.
நடுகல், சதிக்கல், கல்வெட்டு, குத்துக்கற்கள், கருப்பு,சிவப்பு மட்பாண்டங்கள், நினைவுத்தூண்கள் போன்றவை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கண்டெடுக்கப்பட்டவையே. காட்டெருமை தலை, ராட்சத வவ்வால், வேளா மீனின் ரம்பம் போன்ற பற்கள் தனித்தனி அரங்குகளில் வைத்து விளக்கம் அளிக்கப்பட்டுள்ளன.
சமூக வரலாற்றுக் கூடத்தில் வீரபாண்டி கவுமாரியம்மன் கோயில், தேவதானப்பட்டி மூங்கிலணை காமாட்சி அம்மன் கோயில், உத்தமபாளையம் திருக்காளாத்தீஸ்வரர் ஞானாம்பிகை கோயில், குச்சனூர் சனீஸ்வர பகவான் கோயில் போன்றவற்றின் சிறப்புகள், திருவிழா, பாரம்பரிய போட்டிகள், விளையாட்டுக்கள், பெரியகுளம் மாம்பழம், சின்னமனூர் வெற்றிலை, கம்பம் திராட்சை, குரங்கணி காபி, போடி ஏலக்காய், மேகமலை தேயிலை, வடுகபட்டி பூண்டு என்று மண்சார்ந்த விளைபொருட்களின் விபரங்களும் இடம்பெற்றுள்ளன.
போடிநாயக்கனூர் அரண்மனையில் உள்ள ராமாயண மூலிகை ஓவியங் கள், சின்னமனூர் செப்பேடு செய்திகள், சங்ககால புலவர்களின் ஓலை ஆவணங்கள், பழியர்கள்பயன்படுத்தி பொருட்கள் ஆகியவை புகைப்படங்களாக வசீகரிக்கின்றன. கிராமிய நடனங்கள், நாட்டுபு்புற பாடல்களில் இசை எழுப்பும் தவில், கொம்பு, கடம், ஒத்து, தப்பு போன்ற இசைக்கருவிகளும் வைக்கப்பட்டுள்ளன. மன்னர் காலத்திய பித்தளை சீப்பு, அளவைக் கருவிகள், தூபம் போடும் கரண்டிகள் என்று மூதாதையரின் உலோக பொருட்கள் நம்மை அந்தகாலத்திற்கே அழைத்துச் சென்று விடுகின்றன.
தமிழ் எழுத்துக்களின் ஆரம்பநிலை வடிவங்கள், மொழி தோன்றாத காலத்தில் தகவல்களை பரிமாறிக் கொள்ள பாறைகளில் ஏற்படுத்தப்பட்ட கீறல் தோற்றங்கள் என்று மூதாதையரின் செயல்பாடுகள் ஆச்சரியப் படுத்துகின்றன. ஜம்புலிபுத்தூரில் கண்டெடுக்கப்பட்ட செக்கு உரல் கல்வெட்டு, எல்லப்பட்டியில் கண்டறியப்பட்ட நான்கரை அடி உயர புத்தர்சிலை, கோம்பை அருகே குசவம்பட்டி எல்லைக்கல், பூதிப்புரம் வீரக்கல், பெரியகுளத்தின் 1900-ம் ஆண்டு மீனாம்பிகை அச்சகத்தில் வெளியிடப்பட்ட இதழ்கள், பாம்பு விஷத்தை முறிக்கும் விதத்தை குறிப்பிடும் எரசக்காநாயக்கனூர் பாம்புக்கடி கல்வெட்டு, தேர்சிற்பங்கள் உள்ளிட்ட பல்வேறு வரலாற்று பொருட்கள் பார்ப்பவர்களை மெய்சிலிர்க்க வைக்கின்றன.
ஒவ்வொன்றையும் தெளிவாக பார்க்க தனித்துவமான விளக்குகள், வழிந்தோடும் மெல்லிய இசை என்ற நம் மனம் முன்னோர்களிடமே ஒன்றிப் போய் விடுகிறது. காப்பாட்சியர் கிருஷ்ணம்மாள் கூறுகையில், இம்மாவட்டத்தின் முழுமையான வரலாறுகள் பலருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. இங்கு வந்தால் சமூகம், பண்பாடு, தொழில், ஆன்மீகம் என்று 6 பிரிவுகளில் பல்வேறு விவரங்களை தெரிந்து கொள்ள முடியும்.
இதற்காக அரசு பெரும் முயற்சியில் இந்த வசதியை செய்து தந்துள்ளது. மாவட்டத்தின் ஒவ்வொரு பகுதிகளிலும் கிடைத்த வரலாற்று எச்சங்களை ஆய்வு செய்து பாதுகாத்து இங்கு காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.
எனவே இதனை பொதுமக்கள் உரிய முறையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். மேலும் விபரங்களுக்கு 94436 71084 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என்றார்.
விடுமுறை நாட்கள்
ஒவ்வொரு வெள்ளி மற்றும் இரண்டாம் சனிக்கிழமை விடுமுறை. அதேபோல் தேசிய விடுமுறை நாட்களான குடியரசு, சுதந்திரதினம் மற்றும் காந்தி ஜெயந்தி போன்ற நாட்களிலும் அருங்காட்சியகத்திற்கு விடுமுறை ஆகும்.
நுழைவுக்கட்டணம்
நுழைவுக்கட்டணம் ரூ.5-ம், குழந்தைகளுக்கு ரூ.3-ம் பெறப்படுகிறது. கல்விச் சுற்றுலா வரும் மாணவ, மாணவியருக்கு (யூனிபார்ம் அணிந்திருக்க வேண்டும்) இலவசம். வெளிநாட்டுப் பயணிகளுக்கு ரூ.100 கட்டணம் பெறப்படுகிறது. இதேபோல் கேமராவிற்கு ரூ.20-ம், வீடியோக கேமராவிற்கு ரூ.100-ம் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. காலை 9.30 முதல் மாலை 5 மணி வரை பார்வையாளர்கள் அனுமதிக்கப்படுவர்.
பழங்கால பெயர்கள்
சின்னமனூர்-அரபதசேகரமங்கலம்,
அரிகேசரிநல்லூர், அரவார்மங்கலம், திருபூலாந்துறை
உப்பார்பட்டி-ஆழ்வான்நங்கைச்சதுர்வேதிமங்கலம்
உத்தமபாளையம்-திருகுணகிரி/குணவூர்
கம்பம்-திருப்புதுவூர்
டொம்புச்சேரி-திருவடியாபுத்தூர்
தேவாரம்-தேவாரபன்மநல்லூர்
வீரபாண்டி-புல்லூர்/புல்லிநல்லூர்/வீரபாண்டியநல்லூர்
பெரியகுளம்-ஆலங்குளம்(தேசியெறி வீரபட்டினம்),குளந்தை மாநகரம்
வருசநாடு-வரிசை