

பழநி சட்டசபை தொகுதியில் போட்டியிடும் அதிமுக, திமுக வேட்பாளர்களின் குடும்பத்தினர் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.
தமிழக சட்டசபை தேர்தல் ஏப்ரல் 6-ல் நடைபெறவுள்ளது. வேட்புமனுத்தாக்கல், பரிசீலனை, இறுதிப்பட்டியல் என மார்ச் 22 வரை உள்ளதால், இதன்பின் தேர்தல் பிரச்சாரத்திற்கு குறைந்த நாட்களே உள்ளது. இதையடுத்து வேட்பாளர்கள் தங்கள் தொகுதிக்குட்பட்ட அனைத்து பகுதிகளுக்கும் சென்றுவருவது சிரமம் என்பதால் அவர்களின் குடும்பத்தினரை பிரச்சாரத்திற்கு களம் இறக்கியுள்ளனர்.
பழநி தொகுதி திமுக எம்.எல்.ஏ.வாக தற்போதுள்ள திமுக கிழக்கு மாவட்ட செயலாளர் இ.பெ.செந்தில்குமார் மீண்டும் பழநி தொகுதியில் போட்டியிடுகிறார். அதிமுக சார்பில் ரவிமனோகரன் போட்டியிடுகிறார். பழநி, கொடைக்கானல் என இருபெரும் பகுதிகள் உள்ளதால், குறைந்த நாட்களில் அனைத்து பகுதிகளுக்கும் சென்று வேட்பாளர்கள் வாக்குச் சேகரிப்பது இயலாத காரியமாகவே உள்ளது. இதனால் திமுக வேட்பாளரின் மனைவி மெர்சி செந்தில்குமார் தனது கணவருக்காக தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.
அதிமுக வேட்பாளர் ரவிமனோகரனின் தாயார் சிவகாமி, சகோதரி உமாமகேஸ்வரி ஆகியோரும் தனியாக தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளனர். வேட்பாளர்கள் செல்ல முடியாத ஊர்களுக்கு இவர்கள் சென்றும், உறவினர்கள், நண்பர்கள் ஆகியோரை சந்தித்தும் இருதரப்பினரும் பிரச்சாரத்தில் தீவிரம் காட்டி வருகின்றனர்.