Published : 21 Mar 2021 03:15 AM
Last Updated : 21 Mar 2021 03:15 AM

சினிமா படப்பிடிப்புகளில் காற்றில் பறக்கும் கரோனா கட்டுப்பாடுகள்: திண்டுக்கல்லில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்

திண்டுக்கல் மாவட்டத்தில் நடைபெறும் படப்பிடிப்புகளால், கரோனா பரவும் அச்சம் மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது. பழநியில் நடந்த படப்பிடிப்பில் படப்பிடிப்பு குழுவினரில் ஒருவருக்கு கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டது.

திண்டுக்கல் மாவட்டத்தில் பல இடங்களில் சினிமா படப்பிடிப்புகள் அடிக்கடி நடைபெறுவது வழக்கம். கரோனாவிற்கு பின்னர் முதல் படப்பிடிப்பு திண்டுக்கல் மாவட்டத்தில்தான் நடந்தது. கடந்த ஒருவாரமாக பழநி அருகே நெய்க்காரப்பட்டியில் இயக்குனர் ஹரி இயக்கத்தில் நடிகர் அருண்விஜய் நடிக்கும் பெயரிடப்படாத படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வந்தது. இதில் நடிகை பிரியாபவானிசங்கர், நடிகர் யோகிபாபு உள்ளிட்டோர் நடித்து வந்தனர். படப்பிடிப்பு குழுவில் தயாரிப்பு பிரிவை சேர்ந்த ஒருவருக்கும், இயக்குனர் ஹரிக்கும் கரோனா அறிகுறி தெரியவே இருவரும் பரிசோதனைக்கு உட்படுத்திக்கொண்டனர். இதில் தயாரிப்பு பிரிவை சேர்ந்த ஒருவருக்கு கரோனா தொற்று உறுதியானது. இதையடுத்து படப்பிடிப்பு ரத்து செய்யப்பட்டது. படப்பிடிப்பில் கலந்துகொண்ட நடிகர்கள் அனைவருக்கும் கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இன்னமும் முடிவுகள் வரவில்லை.

இந்நிலையில் படப்பிடிப்பில் கலந்து கொண்டவர்கள் பழநி மலைக்கோயில், உடற்பயிற்சி கூடம் ஆகியவற்றிற்கு சென்றுவந்தது தெரியவந்துள்ளது. கரோனா பரிசோதனை முடிவுகள் வந்தவுடன், மேலும் சோதனைகள் நடத்த சுகாதாரத்துறையினர் முடிவு செய்துள்ளனர்.

திண்டுக்கல்லில் கடந்த சில தினங்களாக நடிகர் விஜய்சேதுபதி நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. நேற்று திண்டுக்கல் பேருந்து நிலையத்தில் நடந்த படப்பிடிப்பில், சமூக இடைவெளியின்றியும், முகக்கவசம் அணியாமலும் பலர் இருந்தனர். பொதுமக்கள் கூட்டமும் அதிகம் காணப்பட்டது. வேடிக்கை பார்க்க வந்தவர்களும் முகக்கவசம் அணியவில்லை.

ஏற்கனவே திண்டுக்கல் நகரில் உள்ள ஒரு பள்ளியில் பள்ளி மாணவி, ஆசிரியைகளுக்கு கரோனா தொற்று கண்டறியப்பட்டது. படிப்படியாக திண்டுக்கல் மாவட்டத்தில் கரோனா தொற்று அதிகரித்து வருகிறது. இந்நிலையில் கரோனா பரவ அதிக வாய்ப்புள்ள பொது இடங்களில் படப்பிடிப்பு நடத்த எப்படி அனுமதியளிக்கப்பட்டது என்ற கேள்வியும் எழுந்துள்ளது. இது குறித்து திண்டுக்கல் மாவட்ட நிர்வாகம், மாநகராட்சி அதிகாரிகள், சுகாதாரத்துறையினர் நடவடிக்கை எடுக்கவேண்டும் என திண்டுக்கல் மக்களிடையே எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x