Published : 21 Mar 2021 03:15 AM
Last Updated : 21 Mar 2021 03:15 AM

திண்டுக்கல் மாவட்ட தொகுதிகளில் மக்கள் நீதி மய்ய கூட்டணி வேட்பாளர்களை தேர்வு செய்வதில் கடைசிவரை இழுபறி

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள தொகுதிகளில் மக்கள் நீதி மய்யம் கூட்டணி, வேட்பாளர்களை களம் இறக்குவதில் கடைசிவரை இழுபறி நிலையே காணப்பட்டது.

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள ஏழு தொகுதிகளில் மக்கள் நீதி மய்யம் கட்சி கூட்டணியில் உள்ள சமத்துவ மக்கள் கட்சிக்கு தொகுதிகள் ஒதுக்கப்படவில்லை. மக்கள் நீதி மய்யம் திண்டுக்கல், பழநி, ஆத்தூர், நத்தம், வேடசந்தூர் ஆகிய ஐந்து தொகுதிகளிலும் அதன் கூட்டணிக் கட்சியான தமிழக மக்கள் ஜனநாயக கட்சி ஒட்டன்சத்திரம் தொகுதியிலும், நிலக்கோட்டை தொகுதியில் கூட்டணியில் எந்த கட்சிக்கு ஒதுக்கப்பட்டது, யார் போட்டியிடப் போகிறார்கள் என மக்கள் நீதி மய்யம் கட்சியினருக்கே தெரியவில்லை.

இதில் திண்டுக்கல் தொகுதியில் கட்சி நிர்வாகி அல்லாத அரசியலுக்கு புதிய முகமான கட்சி நிர்வாகிகளுக்கு கூட அறிமுகம் இல்லாத ராஜேந்திரன் என்பவர் மக்கள் நீதி மய்யம் வேட்பா ளராக நிறுத்தப்பட்டுள்ளார். பழநி தொகுதியில் கட்சிக்கு புதியவரான, தேர்தலில் போட்டியிட அழைத்து வரப்பட்டவராக முன்னாள் திமுக எம்.எல்.ஏ. பூவேந்தன் மக்கள் நீதி மய்யம் வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளார்.

வேடசந்தூர் தொகுதி தமிழக மக்கள் ஜனநாயக கட்சிக்கு ஒதுக்கப்பட்டு வேட்பாளராக சையது முஸ்தபா அறிவிக்கப்பட்ட நிலையில், அவர் இருசக்கர வாகனத்தில் சென்று மக்கள் நீதி மய்யம் நிர்வாகிகளை சந்திக்க இவர் சரிபட்டுவரமாட்டார் என கட்சி தலைமையிடம் மநீம நிர்வாகிகள் முறையிட்டுள்ளனர். வேட்பாளருக்கு ஒத்துழைப்பு இல்லை என்பதால், வேட்பாளர் வாபஸ் பெறப்பட்டு இந்த தொகுதியில் மக்கள் நீதி மய்யம் போட்டியிடுகிறது. இதன் வேட்பாளராக வெற்றிவேல் நிறுத்தப்பட்டுள்ளார்.

ஆத்தூர் தொகுதியில் மக்கள் நீதி மய்யம் சார்பில் சிவசக்திவேல் போட்டியிடுகிறார். தமிழக மக்கள் ஜனநாயக கட்சி சார்பில் ஒட்டன்சத்திரம் தொகுதியில் அப்துல்ஹாதி போட்டி யிடுகிறார். நத்தம் தொகுதியில் இந்திய ஜனநாயக கட்சி சார்பில் சரண்ராஜ் நிறுத்தப்பட்டுள்ளார்.

நிலக்கோட்டை தொகுதியில் போட்டியிட வேட்புமனுத் தாக்கல் இறுதிநாள் வரை யார் வேட்பாளர் என தெரியாமல் இருந்தனர்.

திடீரனெ மற்றொரு கூட்டணிக் கட்சியான குறிஞ்சி வீரர்கள் கட்சிக்கு ஒதுக்கப்பட்டது என தெரிய வந்தது. இந்த கட்சி சார்பில் ஆனந்து வேட்புமனுத் தாக்கல் செய்தார்.

மநீம கூட்டணியில் வேட்பாளர்களை தேர்வு செய்வதில் கடைசிவரை இழுபறி நிலையே நீடித்தது. கடைசியில் திண்டுக்கல் மாவட்டத்தில் மொத்தமுள்ள ஏழு தொகுதிகளில் மநீம கூட்டணியில் மநீம-4, ஐ.ஜே.கே, தமிழக மக்கள் ஜனநாயக கட்சி, குறிஞ்சி வீரர்கள் கட்சி தலா ஒரு இடத்திலும் போட்டியிடுகிறது.

கடந்த மக்களவை தேர்தலில் தேர்தல் பணியாற்றிய மக்கள் நீதி மய்யம் கட்சி நிர்வாகிகள் இந்த தேர்தலில் இதுவரை முழுமையாக களம் இறங்கி இன்னமும் பணிகளை தொடங்கவில்லை. வேட்பாளர்களை தேர்வு செய்வதிலேயே காலதாமதமாகிவிட்டது. பிரச்சாரத்திலும் பின்தங்கியே உள்ளனர் மநீம கூட்டணி வேட்பாளர்கள். வேட்பாளர்கள் தேர்தலுக்கு புதிது என்பதால் பிற கட்சிகளின் பிரச்சார வேகத்திற்கு இவர்களால் ஈடுகொடுக்க முடியாத நிலையே நிலவுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x