

சினிமா தியேட்டர்களை விலைக்கு வாங்கப்பட்ட விவகாரத்தில் உண்மையை கொண்டுவர சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
நமக்கு நாமே விடியல் மீட்பு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள ஸ்டாலின் 3-ம் கட்ட பயணமாக நேற்று திருவள்ளூர் மாவட்டம் வந்தார்.
திருமழிசையில் 110 மகளிர் குழுக்களை சேர்ந்த 300-க்கும் மேற்பட்ட பெண்களுடன் ஸ்டாலின் உரையாடினார். அப்போது அவர் பேசும்போது திமுக ஆட்சிக்கு வந்தவுடன், மது விலக்கை அமல்படுத்தும் என்றார்.
ஆவடி, கோவர்த்தனகிரி- கலைஞர் நகர் பகுதியில் உள்ள குடிசை பகுதிகளுக்கு சென்று, பொதுமக்களின் குறைகளை கேட்டறிந்தார். அதனை தொடர்ந்து, ஆவடி மார்க்கெட் பகுதியில் நடைபயணம் மேற்கொண்டார். அப்போது, தங்கள் கோரிக்கைகள் தொடர்பாக வியாபாரிகள் அளித்த மனுக்களை பெற்றுக் கொண்டார்.
செய்தியாளர்களை சந்தித்த மு.க.ஸ்டாலின், ‘முதல்வர் ஜெயலலிதாவின் உடன்பிறவா சகோதரி சசிகலாவும், அவரது குடும்பத்தினரும் பினாமிகளும் சேர்ந்து ரூ.1,000 கோடி மதிப்பில் சொத்துகளை வாங்கியுள்ளது குறித்து, ‘தி இந்து’ உரிய ஆவணங்களுடன் செய்தி வெளியிட்டுள்ளது. இதற்கு, முதல்வர் ஜெயலலிதாவோ, அரசோ, சசிகலாவோ எந்த மறுப்பும் தெரிவிக்கவில்லை.
இந்நிலையில், சினிமா தியேட்டர்கள் நிர்வாகத் தரப்பில், நாங்கள் தியேட்டர் களை விற்கவில்லை, லீஸுக்குதான் விட்டுள் ளோம் என்று விளக்கம் அளிக்கப்பட் டுள்ளது. இந்த விளக்கம், சசிகலா தரப்பில் பலவந்தமாக கட்டாயப்படுத்தியோ, மிரட்டியோ அளிக்கப்பட்டிருக்கலாம். இந்த விவகாரத்தில், உண்மை என்ன என்பதை சிபிஐ விசாரணை நடத்தினால்தான் முழு உண்மை தெரியவரும் என்றார்.
பின்னர் பொன்னேரி சென்ற அவர், மீனவர்களை சந்தித்து குறைகளை கேட்டார். கும்மிடிப்பூண்டியில், அம்மா குடிநீருக்காக அமைக்கப்பட்டுள்ள ஆழ் துளை கிணறுகளால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து விவசாயிகளிடம் பேசினார்.