Published : 20 Mar 2021 10:16 PM
Last Updated : 20 Mar 2021 10:16 PM

ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தார் முன்னாள் எம்எல்ஏ; ஓபிஎஸ் ஆதரவாளர் முத்துராமலிங்கம்: தொடர்ந்து ‘சீட்’ மறுக்கப்பட்டதால் முடிவு

மதுரை

துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் தீவிர ஆதரவாளரும், அதிமுகவின் அமைப்புச் செயலாளருமான திருமங்கலம் முன்னாள் எம்எல்ஏ எம்.முத்துராமலிங்கம், தனது ஆதரவாளர்களுடன் இன்று ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தார்.

அதனால், அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தரப்பினர் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

மதுரை திருமங்கலம் தொகுதி முன்னாள் எம்எல்ஏ எம்.முத்துராலிங்கம். இவர், 1996 மற்றும் 2011 ஆகிய தேர்தலில் திருமங்கலம் தொகுதியில் வெற்றிபெற்று எம்எல்ஏவாக இருந்தார்.

இவர் ஆரம்ப காலத்தில் திமுகவில் மு.க.அழகிரி ஆதரவாளராக அவரிடம் மிக நெருக்கமாக இருந்தார். அவரிடம் ஏற்பட்ட மோதலால் திமுகவில் இருந்து விலகி அதிமுகவில் சேர்ந்தார்.

அதிமுகவில் சேர்ந்ததும் 2009ம் ஆண்டு நடந்த திருமங்கலம் இடைத்தேர்தலில் போட்டியிட ஜெயலலிதா இவருக்கு வாய்ப்பு கொடுத்தார். ஆனால், அழகிரியின் ‘திருமங்கலம் பார்முலா’வால் இவர் தோல்வியடைந்தார்.

ஆனாலும், 2011ம் ஆண்டு மீண்டும் அதிமுக சார்பில் போட்டியிட இவருக்கு இதே தொகுதியில் ஜெயலலிதா ‘சீட்’ கொடுத்தார். அதில் வெற்றிபெற்றார்.

அதிமுகவில் எம்எல்ஏவாக, புறநகர் அதிமுக மாவட்டச் செயலாளராக செல்வாக்குடன் முத்துராமலிங்கம் வலம் வந்தார். அதன்பின்பிறகு கடந்த 2016ம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுகவில் இவருக்குப் போட்டியிட வாய்ப்பு கிடைக்கவில்லை.

இவருக்குப் பதிலாக ஆர்பி.உதயகுமாருக்கு ‘சீட்’ வழங்கப்பட்டது. அவர் வெற்றிபெற்ற அமைச்சரானார். இவரிடம் இருந்த புறநகர் மாவட்டச் செயலாளர் பதவி பறிக்கப்பட்டு ராஜன் செல்லப்பாவுக்கு வழங்கப்பட்டது.

அதன்பிறகு இவர் புறநகர் அதிமுகவில் ஆர்.பி.உதயகுமார் மற்றும் ராஜன் செல்லப்பாவால் ஓரங்கட்டப்பட்டார். ஜெயலலிதா இறந்தபிறகு தீவிர ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாக அவரைப் பின்தொடர்ந்தார்.

அதிமுகவில் மாநில அமைப்புச் செயலாளராக உள்ளார். கடந்த மக்களவைத் தேர்தலில் மதுரை தொகுதியில் போட்டியிட ‘சீட்’ கேட்டார். ஓ.பன்னீர்செல்வம் இவருக்கு ‘சீட்’ பெற்றுக் கொடுக்கவில்லை.

இந்த சட்டப்பேரவைத் தேர்தலிலும் திருமங்கலம், திருப்பரங்குன்றம், மதுரை வடக்கு ஆகிய தொகுதிகளில் போட்டியிட விருப்பமனு கொடுத்திருந்தார். ‘சீட்’ கேட்டு ஓ.பன்னீர்செல்வத்திற்கும் நெருக்கடி கொடுத்தார். வழக்கம்போல் அவர் ‘சீட்’ பெற்றுக் கொடுக்கவில்லை. அதனால், அதிருப்தியில் இருந்த இவரும் இவரது ஆதரவாளர்களும், திருமங்கலம் தொகுதியில் அமைச்சர் ஆர்.பி.உதயகுமாருக்கு ஆதரவாக தேர்தல் பணியில் ஈடுபடவில்லை.

இந்நிலையில், இன்று திருமங்கலம் தேர்தல் பிரச்சாரத்திற்கு வந்த ஸ்டாலின் முன்னிலையில் எம்.முத்துராமலிங்கமும், அவரது மகனும் அவனியாபுரம் பகுதி செயலாளருமான கருணாநிதி மற்றும் அவரது ஆதரவாளர்கள் திமுகவில் சேர்ந்தனர்.

நேற்று திருமங்கலம் திமுக வேட்பாளர் மணிமாறனின் சகோதரரை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் அதிமுகவுக்கு இழுத்தார். இன்று, திருமங்கலம் தொகுதி அதிமுகவின் முன்னாள் எம்எல்ஏவும், அக்கட்சியின் மாநில அமைப்புச் செயலாளருமான எம்.முத்துராமலிங்கத்தை திமுகவுக்கு இழுத்து அமைச்சர் ஆர்பி.உதயகுமாருக்கு மணிமாறன் அதிர்ச்சி கொடுத்தார்.

திருமங்கலம் தொகுதியில் தேர்தல் பிரச்சாரம் சூடுபிடித்தநிலையில் அதிமுக, திமுகவின் தேர்தல் வியூகம், பிரச்சாரம் பழைய திருமங்கலம் இடைத்தேர்தலை நினைவுப்படுத்தும் அளவிற்கு களைகட்டத் தொடங்கியுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x