

செங்கல்பட்டு சட்டப்பேரவைத் தொகுதியில், திமுகவின் 7 உறுதிமொழிகள் அடங்கிய துண்டுப் பிரசுரங்கள் மூலம் பொதுமக்களிடம் தொண்டர்கள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
தமிழகத்தின் பொருளாதாரம், வேளாண்மை, நீர்வளம், கல்வி மற்றும் சுகாதாரம், நகர்ப்புற வளர்ச்சி, ஊரக உட்கட்டமைப்பு, சமூக நீதி ஆகியவற்றை மேம்படுத்த ஸ்டாலினின் 7 உறுதிமொழிகள் என்ற தலைப்பில் தொலைநோக்கு திட்டத்தை ஸ்டாலின் திருச்சி மாநாட்டில் வெளியிட்டார்.
இதனை மையப் பொருளாக வைத்து தமிழகம் முழுவதும் தீவிரப் பிரச்சாரமும் மேற்கொண்டு வருகிறார். இதேபோல் இதன் ஒரு பகுதியாக செங்கல்பட்டு சட்டப்பேரவைத் தொகுதிகளில் பல்வேறு கிராமங்களில் திமுக உள்ளிட்ட கூட்டணிக் கட்சியினர் 7 உறுதிமொழிகளை பொதுமக்களிடம் சென்று நேரில் விளக்கி வாக்கு சேகரித்து வருகின்றனர்.
செங்கல்பட்டு அருகே மேலமையூர் கிராமத்தில் ஊராட்சி செயலாளர் இரா.கருணாகரன் தலைமையில் 7 உறுதிமொழிகளை வலியுறுத்தி தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதில் ரவீந்தரன், எம்.சுரேஷ், அப்துல் ஜாபார், பி.கதிரேசன், பொன்னம்பலம் மூர்த்தி, மற்றும் காட்டங்குளத்தூர் தெற்கு ஒன்றிய இளைஞர் அணி துணை அமைப்பாளர் க. பிரவீன் உள்ளிட்டோர் பங்கேற்று தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.
தீவிர வாக்கு சேகரிப்பு குறித்து ஊராட்சி செயலாளர் இரா.கருணாகரன் கூறியதாவது:
தமிழ்நாடு வளம் பெற வேண்டும், தமிழ் மக்கள் வளம் பெற வேண்டும் என்பதற்காக திமுக தலைவர் ஸ்டாலின் பொருளாதாரம், வேளாண்மை, நீர் வளம், கல்வி மற்றும் சுகாதாரம், நகர்ப்புற வளர்ச்சி, ஊரக உட்கமைப்பு, சமூக நீதி ஆகிய 7 துறைகளையும் சீரமைப்பதே எனது முதல் பணி என அறிவித்தார்.
இது தமிழகம் முழுவதும் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. கல்வி ஒரு மனிதனை முழுமையாக்குகிறது. எல்லா மக்களுக்கும் சமமான கல்வி கிடைத்தால் முழுப்பகுதியும் எல்லா வழிகளிலும் அபிவிருத்தி செய்யப்படும்.
இந்தத் திட்டத்தை நிறைவேற்ற திமுக கூட்டணிக்கு வாக்கு அளிக்க வீடு வீடாகச் சென்று துண்டுப் பிரசுரங்கள் வழங்கியும் திமுக ஆட்சிக்கு வந்தால் இந்தத் திட்டங்கள் நிறைவேற்றப்படும் எனவும் அவர்களுக்கு தெரிவித்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறோம்.
செல்லும் இடமெல்லாம் பொதுமக்களிடமிருந்து நிறைவான கருத்து வருவது மகிழ்ச்சியை அளிக்கிறது என்றனர்.