

தேமுதிக துணைப் பொதுச் செயலாளர் எல்.கே.சுதீஷுக்குக் கரோனா தொற்று உறுதியான நிலையில் நுங்கம்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
தமிழகத்தில் கரோனா தொற்று மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. கரோனா தொற்று அதிகரித்த சூழ்நிலையில் கடந்த ஆண்டு இதே மார்ச் மாதத்தில் 24-ம் தேதி முதல் ஊரடங்கு அமலானது. அதன் பின்னர் 10 மாதங்கள் வரை ஊரடங்கு தளர்வுகளுடன் நீட்டிக்கப்பட்டது. சமீப மாதங்களாக கரோனா தொற்று குறைந்ததை அடுத்து, பொதுமக்கள் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பினர்.
இந்நிலையில் கடந்த 10 நாட்களாக கரோனா தொற்று திடீரென அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. 300, 400 என தினம் தினம் எண்ணிக்கை உயர்ந்து நேற்று ஆயிரத்தைத் தாண்டிய தொற்று எண்ணிக்கை இன்று 1,243 என்கிற எண்ணிகையை அடைந்துள்ளது.
பொதுவெளியில் பொதுமக்கள் இடைவெளியின்றிக் கூடுவது கரோனா பரவலுக்கு வகை செய்யும். அரசியல் பிரச்சாரக் கூட்டங்களில் கவனம் செலுத்த வேண்டும் என இரண்டு நாட்களுக்கு முன் சுகாதாரத்துறைச் செயலர் ராதாகிருஷ்ணன் எச்சரித்திருந்தார்.
இந்நிலையில் இன்று தேமுதிக துணைப் பொதுச் செயலாளர் எல்.கே.சுதீஷுக்குக் கரோனா தொற்று இருப்பது சோதனையில் தெரியவந்துள்ளது. கடந்த இரண்டு நாட்களாக காய்ச்சலில் இருந்த அவர் சோதனை செய்த நிலையில் கரோனா தொற்று உறுதியானதை அடுத்து அவர் உடனடியாக நுங்கம்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.