

தமிழகத்தில் போட்டியிடும் வேட்பாளர்களில் ஒரு குழி நிலம்கூட இல்லாத ஒரே வேட்பாளராக களத்தில் நிற்கிறேன் என, கந்தர்வக்கோட்டை தொகுதி வேட்பாளர் எம்.சின்னத்துரை தெரிவித்தார்.
புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வக்கோட்டை தொகுதிக்குட்பட்ட கறம்பக்குடியில் மதச்சார்பற்ற ஜனநாயக கூட்டணி கட்சியின் கூட்டம் இன்று (மார்ச் 20) நடைபெற்றது.
கூட்டத்தில், கந்தர்வக்கோட்டை தொகுதி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் எம்.சின்னத்துரை பேசியதாவது:
"கந்தர்வக்கோட்டை தொகுதியில் கந்தர்வக்கோட்டையில் மட்டுமே சட்டப்பேரவை உறுப்பினர் அலுவலகம் உள்ளது. ஆனால், தொகுதிக்கு உட்பட்ட கறம்பக்குடி, குன்றாண்டார்கோவில், கீரனூர் ஆகிய இடங்களில் தனியாக சட்டப்பேரவை உறுப்பினர் அலுவலகம் கொண்டுவர நடவடிக்கை எடுப்பேன்.
வேட்புமனு தாக்கல் மற்றும் பரிசீலனையின்போது உங்களிடம் எவ்வளவு சொத்துகள் உள்ளன, அதற்கான ஆதாரங்களைக் கொடுங்கள் என்று தேர்தல் அலுவலர்கள் என்னிடம் கேட்டார்கள்.
என்னிடம் ஒரு குழி நிலம் கூட இல்லை. வேறு எந்த வகையிலான சொத்துகளும் இல்லை. ஆகையால், உங்களிடம் காண்பிப்பதற்கு ஆதார் அட்டை, ரேஷன் அட்டை போன்ற ஆவணங்களைத் தவிர வேறெந்த சொத்து ஆவணங்களும் இல்லை என்றேன்.
தமிழகத்திலேயே ஒரு குழி நிலம் கூட இல்லாத ஒரே வேட்பாளராக நான் களத்தில் நிற்கிறேன். அதேசமயம், தொகுதி முழுவதும் இருக்கும் மக்கள்தான் என்னுடைய சொத்துக்களாக கருதுகிறேன்".
இவ்வாறு அவர் பேசினார்.
இக்கூட்டத்தில் திமுக வடக்கு மாவட்ட பொறுப்பாளர் கே.கே.செல்லபாண்டியன், காங்கிரஸ் கட்சியின் வடக்கு மாவட்ட தலைவர் முருகேசன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலாளர் எஸ்.கவிவர்மன் உள்ளிட்ட கூட்டணிக் கட்சியினர் கலந்து கொண்டு பேசினர்.