

திருப்பரங்குன்றம் தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் ராஜன் செல்லப்பா, பிரச்சாரத்திற்குச் செல்லும் இடமெல்லாம் முதல்வர் பழனிசாமி கட்அவுட்களுடன் சென்று பிரச்சாரம் செய்கிறார்.
மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தொகுதியில் அதிமுக சார்பில் மதுரை முன்னாள் மேயர் ராஜன் செல்லப்பா போட்டியிடுகிறார்.
இவர் நேற்று தேவி நகர், பாலாஜி நகர், ஹார்வி பட்டி பகுதியில் பிரச்சாரம் செய்தார். இவர், கடந்த சில நாட்களாக பிரச்சாரத்திற்கு செல்லும் இடமெல்லாம் முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆள் உயர கட்அவுட்களையும் உடன் எடுத்துச் செல்கிறார்.
எதற்காக அவர் முதல்வர் கட்அவுட்களுடன் செல்கிறார், அதன் பின்னால் இருக்கும் அரசியல் என்ன? என்று கட்சியினரிடம் விசாரித்தால் அவர் தன்னை முதல்வரின் தீவிர ஆதரவாளராகக் காட்டிக் கொள்ளவே அப்படிச் செய்கிறார் என்று மூத்த நிர்வாகிகள் தெரிவித்தனர்.
இதுகுறித்து அவர்கள் கூறுகையில், ‘‘கடந்த 10 ஆண்டுகளாக அதிமுக ஆட்சியில், முதல் ஐந்து ஆண்டுகள் மதுரை மேயராக இருந்தார். அடுத்த 5 ஆண்டுகள் வடக்கு தொகுதி எம்எல்ஏவாக இருந்தார்.
இருப்பினும் பலமுறை அமைச்சராக முயற்சி செய்தார். ஆனால், ஏற்கெனவே செல்லூர் கே.ராஜூ, ஆர்.பி.உதயகுமார் போன்றோர் அமைச்சர்களாக இருப்பதால் இவருக்குக் கடைசி வரை வாய்ப்பு கிடைக்காமல் போனது.
இந்த முறையாவது எம்எல்ஏவாக வெற்றிப்பெற்று அதிமுக ஆட்சி அமைத்தால் அமைச்சராக திட்டமிட்டு தேர்தல் பணிகளில் ஈடுபட்டுள்ளார்.
அதனாலேயே, ராஜன் செல்லப்பா தன்னை முழுக்க முழுக்க முதல்வரின் ஆதரவாளராகக் காட்டிக் கொள்ள பிரச்சாரத்திற்குச் செல்லும் இடமெல்லாம் அவரது கட்அவுட்டுகளையும் எடுத்துச் செல்கிறார், ’’ என்றனர்.