Published : 20 Mar 2021 05:33 PM
Last Updated : 20 Mar 2021 05:33 PM

திருவண்ணாமலையில் பாஜகவுக்கு எதிரான அதிமுக வழக்கறிஞரின் வேட்பு மனு தள்ளுபடி  

திருவண்ணாமலை சட்டப்பேரவைத் தொகுதியில் கூட்டணிக் கட்சியான பாஜகவை எதிர்த்துப் போட்டியிடத் தாக்கல் செய்த அதிமுக வழக்கறிஞரின் வேட்பு மனு தள்ளுபடி செய்யப்பட்டது.

திருவண்ணாமலை சட்டப்பேரவைத் தொகுதியில் போட்டியிடத் தாக்கல் செய்யப்பட்ட வேட்பு மனுக்கள் மீதான பரிசீலனை, கோட்டாட்சியர் அலுவலத்தில் இன்று (சனிக்கிழமை) நடைபெற்றது. தேர்தல் பொது பார்வையாளர் அருண் கிஷோர் மற்றும் கோட்டாட்சியரும் தேர்தல் நடத்தும் அலுவலருமான வெற்றிவேல் ஆகியோர் முன்னிலையில், தாக்கல் செய்யப்பட்ட 26 பேரின் வேட்பு மனுக்கள். பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன. இதில் திமுக வேட்பாளர் எ.வ.வேலு, பாஜக வேட்பாளர் தணிகைவேல் உட்பட 19 பேரது வேட்பு மனுக்கள் ஏற்கப்பட்டன.

இதற்கிடையில், அதிமுக சார்பில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கறிஞர் அன்பழகன் வேட்பு மனு பரிசீலனை நடைபெற்றது. அப்போது, வேட்பு மனுவுடன் கட்சியின் அங்கீகாரக் கடிதத்தை, கடைசி நாளான 19-ம் தேதி மதியம் 3 மணிக்குள் வழங்கவில்லை எனத் தேர்தல் நடத்தும் அலுவலர் வெற்றிவேல் தெரிவித்தார்.

அதற்குப் பதிலளித்த வழக்கறிஞர் அன்பழகன், “நான் வேட்பு மனுவை 19-ம் தேதி மதியம் 2.51 மணிக்குத் தாக்கல் செய்தேன். எனது மனுவில் விடுப்பட்டுள்ளவை குறித்து தகவலை, நீங்கள் (கோட்டாட்சியர்) தாமதமாகத்தான் தெரிவித்தீர்கள். உங்களைச் சந்திக்கவும், எனக்கு அனுமதிக்க மறுக்கப்பட்டது. மேலும் வேட்பு மனு பரிசீலனைக்கு முன்பாக, கட்சியின் அங்கீகாரக் கடிதம் உட்பட அனைத்து ஆவணங்களையும் கொடுத்துள்ளேன்” என்று தெரிவித்தார்.

திமுக ஆதரவும்... பாஜக எதிர்ப்பும்

அன்பழகன் மனு மீது ஆட்சேபம் இருக்கிறதா எனக் கோட்டாட்சியர் கேள்வி எழுப்பியபோது, திமுக தரப்பில் பங்கேற்ற வழக்கறிஞர்கள் மனோகரன், பழனி உள்ளிட்டவர்கள், ஆட்சேபம் இல்லை என்றனர். அதே நேரத்தில், கட்சியின் அங்கீகாரக் கடிதம் இல்லாமல் தாக்கல் செய்த மனுவைத் தள்ளுபடி செய்ய வேண்டும் எனப் பாஜகவினர் தெரிவித்தனர்.

இதனால் பாஜக மற்றும் அதிமுகவினர் இடையே சுமார் 15 நிமிடங்கள் வாக்குவாதம் நடைபெற்றது. வாக்குவாதம் முற்றியதால் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டது. இதை உணர்ந்த கோட்டாட்சியர், நீங்கள் யாரும் நேருக்கு நேராகப் பேசிக்கொள்ளக் கூடாது. ஆட்சேபம் இருந்தால் தெரிவிக்கலாம். மற்றபடி, எந்தக் கருத்தையும் நீங்கள் (பாஜகவினர்) தெரிவிக்கக்கூடாது என்றார்.

பின்னர் அவர், தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ள விதிகளை சுட்டிக்காட்டி, ''வேட்புமனுத் தாக்கல் செய்யும் கடைசி நாளன்று மதியம் 3-ம் மணிக்குள் கட்சியின் அங்கீகாரக் கடிதம் வழங்க வேண்டும். அவ்வாறு வழங்காத வேட்பு மனுவைத் தள்ளுபடி செய்யலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது'' எனக் கூறி, அதற்கான ஆதாரங்களை அதிமுக வழக்கறிஞர் அன்பழகனிடம் காண்பித்தார். இதையடுத்து, ''உரிய காலத்துக்குள் கட்சியின் அங்கீகாரக் கடிதம் வழங்கவில்லை எனக் கூறி, அன்பழகன் வேட்பு மனுவைத் தள்ளுபடி செய்கிறேன்'' எனவும் தெரிவித்தார். அதன்பிறகு, பாஜக மற்றும் அதிமுகவினர் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றனர்.

19 பேரது மனுக்கள் ஏற்பு

மனுக்கள் ஏற்பு குறித்து கோட்டாட்சியரும், தேர்தல் நடத்தும் அலுவலரான வெற்றிவேல் கூறும்போது, ''சுயேச்சையாக அன்பழகனின் வேட்பு மனுவை ஏற்றுக் கொள்ள 10 பேர் முன்மொழிந்திருக்க வேண்டும். ஆனால் அவரது மனுவில் ஒருவர் மட்டுமே முன்மொழிந்துள்ளார். எனவே, சுயேச்சைக்கான வாய்ப்பும் அவருக்கு கிடைக்கவில்லை. 19 பேரது மனுக்கள் ஏற்கப்பட்டன. 7 பேரின் மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளன'' என்று தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x