

மத்திய அரசு புதுச்சேரிக்கு அளித்த ரூ.15 ஆயிரம் கோடி என்னவானது என்பது பற்றியும் இங்கு ஐந்து ஆண்டுகளில் நடந்த ஊழல் தொடர்பாகவும் கண்டிப்பாக விசாரணை நடத்துவோம் என்று பாஜக தேர்தல் பொறுப்பாளரான ராஜீவ் சந்திரசேகர் எம்.பி. தெரிவித்தார்.
புதுச்சேரியில் பாஜக அலுவலகத்தில், "புதுவை மக்களின் குற்றப்பத்திரிக்கை" என்ற தலைப்பில் கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு காங்கிரஸ் அளித்த தேர்தல் வாக்குறுதியில் நிறைவேற்றாத அம்சங்கள், ஊழல் குற்றச்சாட்டுகள் உள்ளிட்ட தகவல்களைப் புத்தகமாக, தேர்தல் பொறுப்பாளர் ராஜீவ் சந்திரசேகர் எம்.பி., அறிக்கை தயாரிப்புக் குழுத் தலைவரும், பொதுச் செயலாளருமான செல்வம் உள்ளிட்டோர் வெளியிட்டனர்.
அதைத் தொடர்ந்து இருவரும் இந்த அறிக்கை தொடர்பாகச் செய்தியாளர்களிடம் கூறுகையில், "காங்கிரஸ் தேர்தல் வாக்குறுதிகள் ஒன்றைக் கூட நிறைவேற்றவில்லை. மாதம் 30 கிலோ அரிசி தரவில்லை. எஸ்.சி. மக்களுக்கு வீடு கட்ட ரூ.5 லட்சம் நிதியுதவி தரவில்லை. வீட்டுக்கு ஒருவருக்கு அரசு வேலை என்ற வாக்குறுதியை நிறைவேற்றவில்லை. உள்ளாட்சித் தேர்தலை நடத்தவில்லை. மின் கட்டணத்தைக் குறைக்காமல் உயர்த்தினார்கள்.
மருத்துவக் கல்லூரிகளில் 50 சத அரசு இட ஒதுக்கீடு நிறைவேறவில்லை. ஐடி பார்க் நிறைவேறவில்லை. இலவச உயர் கல்வி தரப்படவில்லை. இலவச செட்டாப் பாக்ஸ், சீரான கேபிள் தொகை பெறவில்லை. தனியார் பள்ளிகளில் கல்விக் கட்டணத்தைச் சீரமைக்கவில்லை. ஆயுஷ்மான் பாரத் திட்டத்தை நிறைவேற்றவில்லை. மில்களை மூடியதால் ஏராளமானோர் பாதிக்கப்பட்டனர்" என்று தெரிவித்தனர்.
தொடர்ந்து செய்தியாளர்களின் கேள்விகளுக்கு அவர்கள் பதில் அளித்தனர்.
கடந்த ஆட்சியில் எதில் ஊழல் நடந்துள்ளது?
மத்திய அரசு கடந்த ஐந்து ஆண்டுகளில் ரூ.15 ஆயிரம் கோடியை ஒதுக்கியது. அத்தொகை என்னவானது? இது பற்றியும், ஊழல் பற்றியும் நாங்கள் மே மாதத்துக்குப் பிறகு கண்டிப்பாக விசாரணை நடத்துவோம்.
ஊழல் நடந்த திட்டங்கள் எவை?
முதல்வர் நிவாரண நிதியில் ஊழல் நடந்துள்ளது. எஸ்.சி. மக்களின் மேம்பாட்டுக்கு ஒதுக்கப்பட்ட நிதி முறைகேடாகப் பயன்படுத்தப்பட்டது. சொகுசு கார்கள் வாகன எண் பதிவு, சுற்றுலாத் துறைக்கு வாங்கப்பட்ட படகு வீடுகள் உள்ளிட்ட அனைத்திலும் ஊழல் நடந்துள்ளது. இதுபோல் பல திட்டங்கள் உள்ளன.
அமைச்சர்கள் யாருக்கும் ஊழலில் தொடர்பு இல்லையா?
ஆட்சிக்குத் தலைமை என்ற அடிப்படையில் அனைத்துக்கும் முதல்வர் பொறுப்பு.
கடந்த ஆட்சியில் கொண்டு வரப்பட்டு அப்போதைய ஆளுநர் கிரண் பேடியால் நிறுத்தப்பட்ட திட்டங்கள் தற்போது ஆளுநரால் நிறைவேற்றப்படுவது அரசியல் இல்லையா?
இல்லை. கடந்த ஆட்சியில் பல திட்டங்கள் கமிஷன் உள் விவகாரங்களால் நிறுத்தப்பட்டன. தற்போது அதுபோல் இல்லாததால் உடனடியாகச் செயல்படுத்தப்படுகிறது.
இவ்வாறு ராஜீவ் சந்திரசேகர், செல்வம் ஆகியோர் தெரிவித்தனர்.