

நாம் தமிழர் கட்சி இருக்கும் வரை பாஜக வராது. அதை நம்புகிற வீரர்கள் எனக்கு வாக்களியுங்கள் என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் ஏப்ரல் 6-ம் தேதி நடைபெறுகிறது. இதைத் தொடர்ந்து திமுக, அதிமுக, அமமுக, மக்கள் நீதி மய்யம் உள்ளிட்ட கட்சிகள் தனித்தனியே கூட்டணி அமைத்துக் களம் காண்கின்றன. இதற்கிடையே நாம் தமிழர் கட்சி 234 தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிடுகிறது. அனைத்துக் கட்சிகளின் தலைவர்களும் வேட்பாளர்களும் அனல் பறக்கும் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதற்கிடையே ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள 4 சட்டப்பேரவைத் தொகுதிகளில் போட்டியிடும் நாம் தமிழர் கட்சி வேட்பாளர்கள் ஜவஹர் (திருவாடானை), சசிகலா (பரமக்குடி), கண்.இளங்கோ (ராமநாதபுரம்), ரஹ்மத் நிஷா (முதுகுளத்தூர்) ஆகியோருக்கு ஆதரவாக ராமநாதபுரம் அரண்மனை முன் அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பிரச்சாரம் செய்தார்.
அப்போது பேசிய அவர், ''22 ஆண்டுகளைத் திமுகவுக்குக் கொடுத்துவிட்டீர்கள். 20 ஆண்டுகளை அதிமுகவுக்கும் கொடுத்துவிட்டீர்கள். விடுதலை பெற்ற இந்தியாவைக் காங்கிரஸ் 50 ஆண்டுகளுக்கும் மேல் ஆள அனுமதித்து விட்டீர்கள். அவர்கள் செய்த சகிக்க முடியாத ஊழல் மற்றும் லஞ்சத்தால்தான் பாஜக என்னும் கட்சியே வந்தது. இல்லையென்றால் வந்திருக்காது.
கச்சத்தீவு மற்றும் காவிரி பிரச்சினைகளில் காங்கிரஸும், பாஜகவும் ஒரே கருத்துடன்தான் செயல்படுகின்றன. மத்திய அரசு, நிறுவனங்கள் அனைத்தையும் தனியார் மயமாக்கி அதானி, அம்பானிகளிடம் பிரித்துக் கொடுத்துவிட்டது.
நானும் நாம் தமிழர் கட்சியும் இருக்கும் வரை தமிழகத்தில் பாஜக வராது. அதை நம்புகிற வீரர்கள் எனக்கு வாக்களியுங்கள். இதைச் சொல்ல நான் பயப்படப் போவதில்லை. இந்த நிலத்தை என் இனத்தை, என்னைத் தாண்டித்தான் ஒருவர் தொட முடியும். இது சத்தியம்'' என்று சீமான் தெரிவித்தார்.