பொதுக் கூட்டத்தில் புகுந்த பசுமாடு: அடிக்காதீங்கப்பா; போய்விடும்; பாதுகாத்து அனுப்பிய முதல்வர்

பொதுக் கூட்டத்தில் புகுந்த பசுமாடு: அடிக்காதீங்கப்பா; போய்விடும்; பாதுகாத்து அனுப்பிய முதல்வர்
Updated on
2 min read

தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் உள்ளே புகுந்த பசுமாட்டைச் சிலர் தாக்க முயல, முதல்வர் பழனிசாமி தலையிட்டு, அடிக்காதீர்கள் வழிவிடுங்கள், அதுவாகப் போய்விடும் என்று தெரிவித்தார். பசுமாடு போகும் வரை தன் பேச்சை நிறுத்தினார். அதற்குப் பிறகே பேச்சைத் தொடர்ந்தார். இதைத் தொண்டர்கள் ஆரவாரத்துடன் வரவேற்றனர்.

தமிழக முதல்வர் பழனிசாமி கூட்டத்தில் பேசும்போது சகல விஷயங்களையும் கவனித்துப் பேசி வருகிறார். ஆம்புலன்ஸ் ஆனாலும் பசுமாடானாலும் அவர் பார்வையில் தப்புவதில்லை. பேச்சை நிறுத்தி, தொண்டர்களுக்குக் கட்டளையிட்டு வழிவிடச் சொல்கிறார்.

தமிழகத்தில் 2017-ல் முதல்வராகப் பொறுப்பேற்ற எடப்பாடி பழனிசாமி அதற்கு முன்னர் வரை பரபரப்பான அரசியல்வாதியோ, அதிமுகவின் 5 முன்னணித் தலைவர்களில் ஒருவரோ அல்ல. ஆனால், முதல்வராகப் பொறுப்பேற்ற பின்னர் பலமுறை ஆட்சிக்குப் பிரச்சினை வந்தபோதும் லாவகமாக அதைக் கையாண்டுள்ளார்.

சமீபகாலமாக சட்டப்பேரவையில், பொதுக்கூட்டங்களில், செய்தியாளர் சந்திப்பில் தனக்கென ஒரு பாணியை வைத்துப் பேசி வருகிறார். குறுகிய காலத்தில் இதுபோன்று ஒருவர் தயாராவது சாத்தியம் அற்ற ஒன்று என்றாலும், முதல்வர் பழனிசாமி அதற்காக எடுத்த முயற்சிகள், தனக்காக ஒரு குழு அமைத்து அதன் வழிகாட்டுதலின்படி செயல்படுவதன் மூலம் இது சாத்தியமாகிறது.

இன்று அதிமுகவில் ஒரே நட்சத்திரப் பேச்சாளர் எடப்பாடி பழனிசாமி என்று சொல்லும் அளவுக்கு, தேர்தல் அறிவிப்புக்கு முன்னரே தமிழகத்தில் பெரும்பாலான இடங்களில் பேசி வருகிறார். தேர்தல் பிரச்சாரத்திலும் தனது தொகுதி தாண்டி தமிழகம் முழுவதும் பிரச்சாரம் செய்யும் தலைவராக உள்ளார். முதல்வர் என்பதைத் தாண்டி எடப்பாடி பழனிசாமியின் எளிமையான பேச்சு திமுக தலைவர் ஸ்டாலினுக்குப் பதிலடியாக உள்ளது. அவர் கேள்விக்கு இவர் பதிலடி எனப் பிரச்சாரம் அனல் பறக்கிறது.

இதேபோன்று தேர்தல் பிரச்சாரத்தில் முதல்வர் பழனிசாமி பேசும்போது வெறுமனே பேசாமல் கூட்டத்தில் என்ன நடக்கிறது என்பதையும் கவனிக்கிறார். சில தலைவர்கள் கோபப்படுவார்கள். ஆனால், பழனிசாமி நிலைமையைப் புரிந்து அதிகாரிகளுக்கும் தொண்டர்களுக்கும் கட்டளையிட்டுப் பிரச்சினையைச் சீர் செய்கிறார்.

சமீபத்தில் அவர் ஒரு இடத்தில் பிரச்சாரம் செய்தபோது வரிசையாக ஆம்புலன்ஸ்கள் வந்தவண்ணம் இருந்தன. அப்போதெல்லாம் பேச்சை நிறுத்திவிட்டு ஆம்புலன்ஸுக்கு வழிவிடும் வகையில் தொண்டர்களை நகரச் சொல்லியும், போலீஸாரை ஆம்புலன்ஸுக்காக வழி ஏற்படுத்தித் தரச் சொல்லியும் அறிவுறுத்தினார். ஆம்புலன்ஸ் சென்ற பின்னரே தன் பேச்சைத் தொடர்ந்தார். ஆம்புலன்ஸை மறிக்காதீர்கள் என உத்தரவிட்டு, வரிசையாக வந்த நான்குக்கும் மேற்பட்ட ஆம்புலன்ஸ்கள் செல்ல வழிவிட்டார்.

இதேபோன்று காட்டுமன்னார்கோவில் பகுதியில் பிரச்சாரம் செய்தபோது திடீரென கூட்டத்திற்குள் புகுந்த பசுமாட்டைத் தொண்டர்கள் அடிக்க முயல, மாடு மிரண்டது. இதைக் கவனித்த முதல்வர் பழனிசாமி “அடிக்காதீங்கப்பா மாடு மிரளுகிறது பார், வழிவிடுங்க அது போய்விடும்” என்று அறிவுறுத்தினார்.

அதையும் மீறி சிலர் அடிக்க முயல, “அடிக்காதீங்கப்பா வழிவிடுங்க, அதுவா போய்விடும், பசுமாடு விவசாயிகளின் தெய்வம்” என்று பேசினார். பசுமாட்டுக்குத் தொண்டர்கள் வழிவிட அது முதல்வர் தயவால் அடி வாங்காமல் அங்கிருந்து சென்றது.

இதனால் முதல்வரின் பேச்சைப் பார்த்து தொண்டர்கள் ஆரவாரம் செய்தனர். பின்னர் முதல்வர் தனது பேச்சைத் தொடர்ந்தார். சாதாரண நிகழ்வு என்றாலும் சாலையை மறித்து கூட்டம் போடும்போது அங்கு உலாவும் விலங்குகள் கூட்டத்தில் சிக்கிக்கொள்வதும், அவற்றைத் தாக்குவதும் மனிதர்களின் இயல்பான குணங்களில் ஒன்று.

அதைக் கவனித்து கூட்டத்தைக் கட்டுப்படுத்தி அனுப்பி வைத்தது நல்ல முன்னுதாரணம். மற்ற கட்சித் தலைவர்களும் இதைப் பின்பற்ற வேண்டியது அவசியம்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in