

ஆயிரம் விளக்கு தொகுதி மக்களுக்கு திமுக என்ன செய்தது என்று குஷ்பு கேள்வி எழுப்பியுள்ளார்.
ஆயிரம் விளக்கு தொகுதி பாஜக வேட்பாளர் குஷ்பு தீவிரமாகப் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். அந்தவகையில் கோடம்பாக்கத்தில் அவர் பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.
அப்போது பிரச்சாரத்தில் ஈடுபட்ட குஷ்பு பேசும்போது, “ஆயிரம் விளக்கு தொகுதிக்கு திமுகவினர் என்ன செய்தார்கள்? 2014-ம் ஆண்டு பிரதமர் மோடி ஆட்சிக்கு வந்தபோது கொண்டுவந்த தூய்மையான இந்தியா திட்டம்கூட இந்தத் தொகுதியில் செயல்படுத்தப்படவில்லை.
இப்பகுதிகளில் அத்திட்டத்தை திமுகவினர் வேண்டுமென்றே கொண்டுவராமல் உள்ளனர். நாங்கள் அடிப்படை பிரச்சினைகளைத் தீர்க்க நடவடிக்கை எடுப்போம். இப்பகுதியில் மக்களுக்கு பட்டா இல்லை எனவே, பட்டா கிடைக்க நடவடிக்கை எடுப்போம்.
சிறுபான்மையினர் ஓட்டு பாஜகவுக்கு நிச்சயம் கிடைக்கும். சிறுபான்மையின மக்கள் பாஜகவுக்கு வாக்களிக்க மாட்டார்கள் என்று கூறுவது எதிர்க்கட்சிகளின் போலியான பிரச்சாரம். ஆயிரம் விளக்கு தொகுதி திமுகவின் கோட்டை அல்ல’’ என்று குஷ்பு கூறியிருந்தார்.