

தஞ்சாவூரில் பள்ளி, கல்லூரி என 14 கல்வி நிலையங்களில் கரோனா தொற்று ஏற்பட்டுள்ளதை அடுத்து, தொற்று பரவும் நிலையில், அலட்சியமாகச் செயல்பட்டதாகப் பள்ளிகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டதுடன் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
தஞ்சாவூர் மாவட்டம், அம்மாபேட்டை அரசு உதவிபெறும் பள்ளியில் 58 மாணவிகள், ஒரு ஆசிரியை மற்றும் மாணவிகளின் பெற்றோரில் 9 பேருக்கு கரோனா தொற்று இருப்பது அண்மையில் தெரியவந்தது.
அதன்பின்பு கும்பகோணத்தில் அரசு உதவி பெறும் பள்ளி, ஒரத்தநாட்டில் தனியார் பள்ளி, பட்டுக்கோட்டை மற்றும் ஆலத்தூர் அரசுப் பள்ளிகள், தஞ்சாவூர் எம்.கே.எம்.சாலையில் உள்ள தனியார் பள்ளி, தஞ்சாவூர் மகர்நோன்புச்சாவடியில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளி ஆகியவற்றில் 7 ஆசிரியர்கள், 10 மாணவ - மாணவியருக்குக் கரோனா ஏற்பட்டது.
தொடர்ந்து எம்.கே.எம். சாலையில் உள்ள தனியார் பள்ளியில் மேலும் 10 மாணவர்கள், 11 ஆசிரியர்கள், மகர்நோன்புச்சாவடியில் உள்ள அரசு உதவிபெறும் பள்ளியில் மேலும் 6 மாணவிகள், தஞ்சாவூரில் உள்ள தனியார் பல்கலைக்கழக மாணவர்கள் 2 பேர், கும்பகோணம் தனியார் கல்லூரியில் 4 பேர், திருவையாறு அரசுக் கல்லூரி, பட்டுக்கோட்டை தனியார் பள்ளி, தஞ்சாவூர் மாரியம்மன் கோயில் அரசுப் பள்ளி ஆகியவற்றில் தலா ஒரு மாணவர் ஆகியோர் கரோனா தொற்று இருப்பது நேற்று உறுதி செய்யப்பட்டது.
இந்நிலையில் இன்று பட்டுக்கோட்டையில் உள்ள தனியார் பள்ளியில் 11 மாணவர்கள், இரண்டு வாகன ஓட்டுனர்கள், ஓர் ஆசிரியர் என 14 பேருக்கும் தஞ்சாவூரில் உள்ள தனியார் மெட்ரிக் பள்ளியில் 15 மாணவர்களுக்கும் என மொத்தம் 29 பேருக்குத் தொற்று இருப்பது ஆய்வில் கண்டறியப்பட்டது.
இதையடுத்து அந்தப் பகுதிகளில் உள்ள வீடுகளில் வசிப்போருக்கு மருத்துவப் பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது. மேலும் பள்ளிகளில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகின்றன.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் கோவிந்த ராவ் கூறும்போது, ''பள்ளிகளில் தொற்று பரவும் நிலையில், அலட்சியமாகச் செயல்பட்ட கும்பகோணத்திலுள்ள அரசு உதவி பெறும் மகளிர் மேல்நிலைப் பள்ளிக்கு 12 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. தஞ்சாவூர் எம்.கே.எம். சாலையில் உள்ள தனியார் மேல்நிலைப்பள்ளிக்கு ரூ.5,000 அபராதமும் அஜாக்கிரதையாக செயல்பட்டதாக பள்ளி நிர்வாகத்தின் மீது வழக்குப் பதிவும் செய்யப்பட்டுள்ளது'' எனத் தெரிவித்தார்