

அமமுகவைப்பற்றிக் கேட்டால் அடிப்பேன் என ஆவேசமாகக் கூறினார் அமைச்சர் கே.டி. ராஜேந்திர பாலாஜி. விருதுநகர் மாவட்டம், ராஜபாளையம் தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடுகிறார் அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி. ஸ்ரீவில்லிபுத்தூர் தொகுதியில் அதிமுக சார்பில் மான்ராஜ் போட்டியிடுகிறார். இந்நிலையில், ஸ்ரீவில்லிபுத்தூரில் அதிமுக தேர்தல் அலுவலக திறப்பு விழா நேற்று காலை நடைபெற்றது. அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி கலந்துகொண்டு அதிமுக தேர்தல் அலுவலகத்தைத் திறந்துவைத்தார்.
அதைத்தொடர்ந்து, செய்தியாளர்கள் சந்திப்பில் அமைச்சர் பேசுகையில், "அமமுக பற்றி கேட்பதாக இருந்தால் இப்போதே கிளம்பிவிடு, சத்துனு அடிச்சுருவேன். தேவையில்லாத பிரச்சினையைக் கேட்கக் கூடாது, இதற்குத்தான் பேட்டி கொடுப்பதில்லை" என ஆவேசமாகக் கூறினார். இதனால் அங்கிருந்த பத்திரிகையாளர்கள், கட்சியினரிடம் சலசலப்பு ஏற்பட்டது.
அதைத்தொடர்ந்து, அமைச்சர் கே.டி. ராஜேந்திர பாலாஜி பேசியதாவது: தமிழகத்தில் மீண்டும் எடப்பாடி ஆட்சி அமைய வேண்டும். இந்த நல்லாட்சி தொடர வேண்டும் என்று மக்கள் நினைக்கிறார்கள். விருதுநகர் மாவட்டத்தில் உள்ள 7 தொகுதிகளிலும் அதிமுக, கூட்டணிக் கட்சிகள், பாஜக அமோக வெற்றிபெற்று அதிமுக ஆட்சிக்கு வந்து மீண்டும் பழனிசாமி முதல்வராகப் பொறுப்பேற்பார்" என்றார்.