

பொதுவாக வாக்கு சேகரிக்கச் செல்லும்இடங்களில் வேட்பாளர்களுக்குத்தான் பொதுமக்கள் ஆரத்தி எடுத்து வரவேற்பர். அவர்களுக்கு தனியாக கவனிப்பு நடக்கும். ஆனால், விருதுநகரில் அலுவலர்கள் ஒன்று சேர்ந்து தேர்தல் பார்வையாளரை ஆரத்தி எடுத்து பொன்னாடை போர்த்தி வரவேற்றனர்.
விருதுநகர் சட்டப்பேரவைத் தொகுதி தேர்தல் பொது பார்வையாளராக வட மாநிலத்தைச் சேர்ந்த ஐஏஎஸ் அதிகாரி பினிதா பெக்கு என்பவர் நியமிக்கப்பட்டுள்ளார்.
வேட்புமனு தாக்கல் செய்ய கடைசி நாளான நேற்று சுயேச்சைகள் மற்றும் கட்சியினர் பலர் வேட்புமனு தாக்கல் செய்ய வந்திருந்தனர். இதை ஆய்வு செய்ய தேர்தல் பார்வையாளர் பினிதா பெக்கு, விருதுநகர் வட்டாட்சியர் அலுவலகத்துக்கு நேற்று காலை வந்தார்.
அப்போது, அவருக்கு வட்டாட்சியர் சிவஜோதி மற்றும் அலுவலர்கள் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர். அதோடு, தேர்தல் பார்வையாளருக்கு பொன்னாடை போர்த்தியும், வெற்றிலை பாக்குடன் ஆரத்தி எடுத்து திலகம் இட்டும் தடபுடலாக மணப்பெண்ணைப்போல வரவேற்பு அளித்தனர். இதைப் பார்த்த வேட்பாளர்கள், பொதுமக்கள் வியப்படைந்தனர்.
அங்கிருந்த ஒரு கட்சியின் மூத்த உறுப்பினர் ‘இந்த தேர்தல்ல..! என்ன நடக்குதுண்ணே புரியலப்பா..! என தன் சகாவிடம் முணுமுணுத்தார்.