விராலிமலை தொகுதியில் அமைச்சர் விஜயபாஸ்கருக்கு ஹாட்ரிக் வெற்றி கிடைக்குமா?

விராலிமலை தொகுதியில் அமைச்சர் விஜயபாஸ்கருக்கு ஹாட்ரிக் வெற்றி கிடைக்குமா?
Updated on
2 min read

உலக புகழ்பெற்ற சித்தன்னவாசல் குகை ஓவியம், சமணர் படுகை, சிற்ப கலைக்கு புகழ் பெற்ற கொடும்பாளூர் மூவர் கோயில், சங்கீதத்துக்கு புகழ்பெற்ற குடுமியான்மலை சிவன் கோயில், விராலிமலை முருகன்கோயில் போன்றவை புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை சட்டப்பேரவைத் தொகுதிக்கான முக்கிய அடையாளங்களாக உள்ளன.

தொகுதியின் முக்கிய பிரச்சினைகள்

நீராதாரத்துக்கு உத்தரவாதமற்ற நிலை இருப்பதால் பெரும்பகுதி விளைநிலங்கள் தரிசாகவே உள்ளன. கல் குவாரி அதிகம் இருந்தாலும் உள்ளூர் மக்களுக்கு அவற்றில் வேலைவாய்ப்பு கிடைப்பதில்லை. உயர்கல்வி பயில்வதற்கான அரசு கல்வி நிறுவனங்கள் இங்கு இல்லாதது மாணவர்களுக்கு பெரும்குறையாக உள்ளது. படித்தவர்களுக்கும் உள்ளூரில் போதிய வேலைவாய்ப்புகள் இல்லை.

இத்தொகுதியில் பெரும்பாலான அரசு அலுவலகங்கள், திட்டங்கள் எல்லாம் இலுப்பூரை மையமாக வைத்தே செயல்படுத்தப்படுவதாக பிற பகுதியைச் சேர்ந்தவர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

சித்தன்னவாசல் சுற்றுலா தலத்தை மேம்படுத்த வேண்டும். தீயணைப்பு நிலையம் அமைக்க வேண்டும். மலைப்பாம்புகள் ஊருக்குள் வருவதை தடுக்க வனப்பகுதியில் மலைபாம்புகளுக்கான மறுவாழ்வு மையம் வேண்டும் என்பன போன்ற பல்வேறு கோரிக்கைகள் நிறைவேற்றப்படாமலேயே தொடர்கின்றன. இந்த தொகுதியில் முக்குலத்தோர், முத்தரையர், கவுண்டர், ஆதிதிராவிடர்கள் பெரும்பான்மையாக வசிக்கின்றனர்.

வளர்ச்சிப் பணிகள்

இலுப்பூர் வருவாய் கோட்டம், விராலிமலை தனி வட்டம், மருத்துவமனைகள் மேம்பாடு, புதிய கல்வி மாவட்டம், மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலகம், சாலைகள், குடிநீர் மேம்பாடு, கூடுதல் பேருந்து சேவை என பல்வேறு திட்டங்கள் கடந்த காலங்களில் நிறைவேற்றப்பட்டுள்ளன.

இத்தொகுதியில்தான் ரூ.14,400 கோடிக்கான காவிரி-தெற்கு வெள்ளாறு- வைகை-குண்டாறு இணைப்பு திட்டத்துக்கு அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது. விராலிமலை முருகன் கோயிலுக்கு மலைப்பாதை வசதி போன்றவை மேற்கொள்ளப்பட்டுள்ளன.

அதிமுகவின் பலம்

இந்தத் தொகுதியில் கடந்த 2011, 2016 சட்டப்பேரவைத் தேர்தல்களில் அதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர், 3-வது முறையாக களத்தில் உள்ளார்.

சொந்தக் கட்சியினர் மட்டுமின்றி பொதுமக்களிடம் சகஜமாக பழகக்கூடியவர். அதிக நாட்கள் தொகுதியில் இருப்பதால் பொதுமக்களும் எளிதாக சந்திக்கும் வாய்ப்பு ஏற்படுகிறது.

இவரது முயற்சியால் தான் புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரியில் கூடுதல் வசதிகள் ஏற்படுத்தப்பட்டதோடு, பல் மருத்துவக் கல்லூரிக்கான பணியும் நடைபெற்று வருகிறது.

சிவிபி எனும் அறக்கட்டளை மூலம் முதியோருக்கு கண் பரிசோதனை செய்து கண்ணாடி வழங்கிய 'கண்ணொளி திட்டம், பெண்களுக்கான தொற்றா நோய் சிறப்பு முகாம், புயல்,மழை காலங்களில் நிவாரண பொருட்கள் வீடுகள்தோறும் வழங்கியது, இளைஞர்களுக்கு இலவச விளையாட்டு உபகரணங்கள் வழங்கியது போன்றவை இப்பகுதி மக்களிடையே வரவேற்பை பெற்றுள்ளன.

அதிமுகவின் பலவீனம்

அரசு ஒப்பந்தப் பணிகளை கட்சியினருக்கு பகிர்ந்து கொடுக்காதது, வன்னியர்களுக்கு 10.5 சதவீதம் உள் இட ஒதுக்கீடுக்கு எதிராக தொகுதியில் மற்ற சமூகத்தினர் மேற்கொண்டுள்ள பிரச்சாரம், அதிகாரத்தை பயன்படுத்தி அளவுக்கு அதிகமாக சொத்து சேர்த்து விட்டதாக எதிர்க்கட்சியினரின் விமர்சனம், அமமுக வேட்பாளர் ஓ.கார்த்தி பிரபாகரன் களத்தில் இருப்பது ஆகியவை விஜயபாஸ்கருக்கு பலவீனமாகப் பார்க்கப்படுகிறது.

திமுகவின் பலம்

எம்.பழனியப்பன், 2011 தேர்தலில் சுயேச்சையாக போட்டியிட்டு தோல்வியை தழுவியவர். 2016ல் திமுக சார்பில் போட்டியிட்டு ஏறத்தாழ 8 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி வாய்ப்பை இழந்தார். தொடர்ந்து தேர்தல் களத்தில் இருப்பதால் தொகுதி மக்களுக்கு நன்கு அறிமுகமாகியுள்ளார்.

மக்களோடு எளிதாக பழகி, பேசக்கூடியவர். அனைத்து நிகழ்ச்சிகளிலும் கலந்து கொள்ளக் கூடியவர். தொகுதியில் கணிசமான வாக்குகளைக் கொண்டுள்ள காங்கிரஸ், திமுக, மதிமுக போன்ற கட்சிகள் திமுக கூட்டணியில் இடம்பெற்றிருப்பது இவருக்கு கூடுதல் பலமாக பார்க்கப்படுகிறது.

‘எனக்கு இதுவே கடைசித் தேர்தல், எல்லாவற்றையும் இழந்துவிட்டேன். இழப்பதற்கு ஒன்றுமில்லை.எனவே, எனக்கு வாய்ப்பு தாருங்கள்’ என்று இவர் உருக்கமாக பிரச்சாரம் செய்து வருகிறார்.

2019 மக்களவைத் தேர்தலில் கரூர் தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற ஜோதிமணி, இந்த விராலிமலை சட்டப்பேரவைத் தொகுதியில் மட்டும் அதிமுக வேட்பாளர் தம்பிதுரையை விட 60 ஆயிரத்துக்கும் அதிகமான வாக்குகளைப் பெற்றது திமுகவுக்கு இந்த தேர்தலில் கூடுதல் பலத்தை கொடுத்துள்ளது.

திமுகவின் பலவீனம்

தேர்தல் பணியில் ஈடுபடுவோருக்கு தாராளமாக செலவு செய்ய இயலாதது, சில இடங்களில் கட்சியினரை அரவணைத்துச் செல்லாதது, கட்சியினரிடையே அதீத பற்றில் அடிக்கடி உணர்ச்சிவசப்பட்டு பேசுவது ஆகியவை இவரது பலவீனங்களாக கருதப்படுகின்றன. இருப்பினும், அமைச்சர் விஜயபாஸ்கருக்கு ஹாட்ரிக் வெற்றி கிடைக்குமா அல்லது திமுக புதிய கணக்கை தொடங்குமா என்பது வாக்காளர்கள் கையில்தான் உள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in