

தஞ்சாவூர் மாவட்டத்தில் போட்டியிடும் அமமுக, தேமுதிக வேட்பாளர்கள் சசிகலாவை சந்தித்துஆசி பெற்றனர்.
சொத்துக் குவிப்பு வழக்கில் தண்டனைக் காலம் நிறைவடைந்து, சிறையில் இருந்து கடந்த ஜனவரிமாதம் விடுதலையான சசிகலா,சென்னையில் இளவரசிக்கு சொந்தமான வீட்டில் தங்கியிருந்தார்.
இந்நிலையில், தஞ்சாவூருக்கு கடந்த 16-ம் தேதி இரவு வந்த சசிகலா, அருளானந்தம்மாள் நகரில் உள்ள உறவினர் வீட்டுக்கு வந்தார். தொடர்ந்து, நேற்று முன்தினம் விளாரில் உள்ள குலதெய்வ கோயிலுக்குச் சென்று வழிபாடு நடத்திய சசிகலா, அங்கு உறவினர்களை சந்தித்து பேசினார். அப்போது, ஒரத்தநாடு தொகுதியில் போட்டியிடும் அமமுக வேட்பாளர் மா.சேகர், சசிகலாவை சந்தித்து ஆசி பெற்றுச் சென்றுள்ளார்.
இதைத் தொடர்ந்து, அமமுக வேட்பாளர்களான திருவையாறு தொகுதி வேலு.கார்த்திகேயன், பட்டுக்கோட்டை தொகுதி எஸ்.டி.எஸ்.செல்வம் மற்றும் தஞ்சாவூர் தொகுதி தேமுதிக வேட்பாளர் ப.ராமநாதன் ஆகியோர், அருளானந்தம்மாள் நகரில் சசிகலா தங்கியிருக்கும் வீட்டுக்கு நேற்று காலை சென்றனர். அப்போது, திருச்சி ரங்கம் கோயிலுக்குச் செல்வதற்காக சசிகலா காரில் அமர்ந்திருந்தார். அவரிடம் வேட்பாளர்கள் 3 பேரும் தங்களை அறிமுகப்படுத்திக்கொண்டனர். இதையடுத்து, அவர்கள் தேர்தலில் வெற்றி பெற வாழ்த்துக் கூறிவிட்டு,சசிகலா புறப்பட்டுச் சென்றார்.
ஸ்ரீரங்கம் கோயிலில் தரிசனம்
ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலுக்கு நேற்று வந்த சசிகலாவை கோயில் பட்டர்கள் வரவேற்று சிறப்பு தரிசனத்துக்கு ஏற்பாடு செய்தனர்.
கோயிலில் கருடாழ்வாரை தரிசித்த சசிகலா, பின்னர் மூலவர் ரங்கநாதரை வழிபட்டார். அதைத் தொடர்ந்து தாயார் சன்னதி, சக்கரத்தாழ்வார் சன்னதி, ராமானுஜர் சன்னதிகளுக்குச் சென்று வழிபாடு நடத்தினார்.
சசிகலா வருகை குறித்த தகவல்அறிந்த ரங்கம் தொகுதி அமமுகவேட்பாளர் சாருபாலா தொண்டைமான், பிரச்சாரத்தை பாதியிலேயே நிறுத்திவிட்டு கோயிலுக்கு வந்து அங்கு சசிகலாவைச் சந்தித்து நலம் விசாரித்தார்.