தமிழகத்தின் நிதி நிலையைச் சீரமைக்க உயர்நிலைக் குழு; திருப்பூர் பிரச்சாரத்தில் மு.க.ஸ்டாலின் உறுதி

தமிழகத்தின் நிதி நிலையைச் சீரமைக்க உயர்நிலைக் குழு; திருப்பூர் பிரச்சாரத்தில் மு.க.ஸ்டாலின் உறுதி
Updated on
2 min read

திருப்பூர் தெற்கு தொகுதி திமுக வேட்பாளர் க.செல்வராஜ், வடக்கு தொகுதி ரவி (எ) சுப்பிரமணியம், பல்லடம் முத்துரத்தினம், அவிநாசி வேட்பாளர் இரா.அதியமான் ஆகியோரை ஆதரித்து, திருப்பூர்-காங்கயம் சாலை சிடிசி முனையத்தில் நேற்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.

அவர் பேசும்போது, "அதிமுக ஆட்சியில் தமிழகம் பாழடைந்துள்ளது. 2011-ல் ரூ.1 லட்சம் கோடியாக இருந்த கடன் சுமை, தற்போது ரூ.6 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது. வெற்றி நடைபோடும் தமிழகம் என விளம்பரம் செய்கிறார் முதல்வர் பழனிசாமி. உண்மையில், வெற்று நடைதான் போடுகிறது. தமிழகத்தின் நிதி நிலையைச் சீரமைக்க உயர்நிலைக் குழு அமைக்கப்படும்.

மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கு 2019-ல் அடிக்கல் நாட்டினாலும், இதுவரை ஒரு செங்கல்கூட எடுத்துவைக்கவில்லை. திமுக ஆட்சியில் தமிழகத்தில் 11 மருத்துவக் கல்லூரிகள் திறக்கப்படும். கருணாநிதி, ஜெயலலிதா உயிரோடு இருந்தவரை தமிழகத்துக்குள் நீட் தேர்வு வரவில்லை. முதல்வர் பழனிசாமி பதவியேற்ற பின்னர், நீட் தேர்வு வந்துவிட்டது. இதனால் 14 மாணவ, மாணவிகள் உயிரிழந்துள்ளனர்.

பருப்பு முதல் சமையல் காஸ் வரை விலை உயர்ந்துவிட்டது. இதுகுறித்து தமிழக ஆட்சியாளர்களுக்கு கவலையில்லை. 10 ஆண்டுகள் ஆட்சியில், தமிழகம் 50 ஆண்டுகள் பின்னோக்கிச் சென்றுவிட்டது.

திருப்பூரில் பின்னலாடை ஆய்வு மையம், மகளிர் கல்லூரி, சட்டக் கல்லூரி தொடங்கப்படும். இந்த தேர்தல் தமிழகத்தின் சுயமரியாதைக்கானது. அதிமுக எம்எல்ஏ-க்களாக தேர்ந்தெடுக்கப்படுவோர், பாஜக எம்எல்ஏ-வாகத்தான் இருப்பார்கள்.

இவ்வாறு ஸ்டாலின் பேசினார்.

கோவையில் புதிய புறநகர்

திமுக வேட்பாளர்கள் தொண்டாமுத்தூர் கார்த்திகேய சிவசேனாபதி, கிணத்துக்கடவு குறிச்சி பிரபாகரன், பொள்ளாச்சி வரதராஜன், கொமதேக வேட்பாளர் செல்வம் ஆகியோரை ஆதரித்து ஈச்சனாரியில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:

அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மீதான ஊழல் வழக்கு விசாரணையை லோக் ஆயுக்தாவுக்கு அனுப்பி, அதிமுக அரசே ஊழலை ஒப்புக்கொண்டுள்ளது. காவல் துறையினர் துணையுடன் கோவையில் அதிமுகவினர் வாக்காளர்களுக்கு பணம் விநியோகிக்கின்றனர். இதுகுறித்து தேர்தல் ஆணையத்திடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது. திமுக ஆட்சிக்கு வந்தவுடன் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

அதிமுக சிஏஏ சட்டத்துக்கு ஆதரவு அளித்தது. சிறுபான்மையின மக்களுக்கு எப்போதும் திமுக-தான் அரணாகத் திகழும். கோவை அருகே நடந்த பாலியல் கொடுமையில் அதிமுகவைச் சேர்ந்தவர்களுக்கு தொடர்பு உள்ளது. திமுக ஆட்சிக்கு வந்தவுடன்உரிய நடவடிக்கை எடுக்கப்படும். 2011, 2016 தேர்தல்களின்போது அதிமுக தேர்தல் அறிக்கையில் கூறிய திட்டங்களையே, இப்போது மீண்டும் கூறியுள்ளனர்.

திமுக ஆட்சிக்கு வந்தவுடன் அவிநாசி-அத்திக்கடவு திட்டம் முழுமையாக நிறைவேற்றப்படும். கோவையில் அனைத்து வசதிகளுடன் கூடிய, புதிய புறநகர் உருவாக்கப்படும்.

போக்குவரத்து நெரிசலைச் சீரமைக்க பறக்கும் சாலை திட்டம் செயல்படுத்தப்படும். பெட்ரோல், டீசல், சமையல் காஸ் சிலிண்டர் விலை குறைக்கப்படும். மாணவர்களின் கல்விக்கடன் தள்ளுபடி செய்யப்படும். கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு திமுக ஆட்சியில் ரூ.4 ஆயிரம் வழங்கப்படும். கிணத்துக்கடவு, தொண்டாமுத்தூரில் குளிர்பதனக் கிடங்கு அமைக்கப்படும்.

பொள்ளாச்சி ரயில் நிலையத்தை பாலக்காடு கோட்டத்தில் இருந்து பிரித்து, சேலம் கோட்டத்தில் இணைக்க முயற்சிக்கப்படும். தொண்டாமுத்தூரில் அரசு பாலிடெக்னிக் கல்லூரி, சூலூரில் அரசு கலை, அறிவியல் கல்லூரி, மகளிர் பாலிடெக்னிக் கல்லூரி ஏற்படுத்தப்படும். இவ்வாறு அவர் பேசினார். தொடர்ந்து, குனியமுத்தூரில் வீதி வீதியாகச் சென்று வாக்கு சேகரித்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in