Published : 11 Mar 2014 02:47 PM
Last Updated : 11 Mar 2014 02:47 PM

தனித்துப் போட்டியிட தைரியம் தந்த வெண்மணி நிகழ்ச்சி: அதிமுகவுக்கு எதிராக திரண்ட மார்க்சிஸ்ட்டுகள்

நாகை மாவட்டம் கீழ்வேளூர் அருகே உள்ள வெண்மணியில் தியாகிகளின் நினைவிட திறப்பு நிகழ்ச்சியில் திரண்ட மார்க்சிஸ்ட் தோழர்களின் கூட்டத்தால் கடந்த ஞாயிற்றுக்கிழமை போக்குவரத்து முடங்கியது. இத்தனைக்கும் இந்தமுறை மார்க்சிஸ்ட் பொறுப்பாளர்கள் கண்டிப்பான உத்தரவு போட்டிருந்தார்கள்.

யாரிடமும் வசூல் செய்து வண்டிகள் எடுத்துவர வேண்டாம், வருவதாக இருந்தால் தோழர்கள் தங்களுக்குள் பகிர்ந்து கொண்டு வாகனம் எடுத்து வர வேண்டும் என்பதுதான் அந்த உத்தரவு. ஆனாலும் இவ்வளவு பேர் திரண்டு வரக் காரனம் என்ன என்பதை ‘தி இந்து’ அலசியது.

இதுகுறித்து சிதம்பரம் சட்டமன்ற உறுப்பினர் கே.பாலகிருஷ்ணன் கூறுகையில், ‘‘வர்க்கப் போராட்டத்தில் உயிரிழந் தவர்களின் நினைவாக கோடிக் கணக்கில் செலவழிக்கப்பட்டு அமைக்கப்பட்டுள்ள நினை வாலயத்தை தரிசிக்க வேண்டும். அகில இந்திய பொதுச்செயலாளர் பிரகாஷ்காரத் வருகிறார் என்பதெல்லாம் காரணங்களாக இருந்தாலும் தோழர்களின் பெருந்திரள் வருகைக்கு முக்கிய காரணமே அதிமுகதான்.

அகில இந்திய அளவில் ஜெயலலிதாவை முன்னிறுத்த இங்கே எந்த நிபந்தனையும் இல்லாமல் எங்கள் கட்சியின் தலைவர்கள் போயஸ் கார்டனுக்கே வந்து தங்கள் ஆதரவை அளித்துவிட்டுப் போனார்கள். எங்கள் கூட்டணியில் கம்யூனிஸ்ட் கட்சிகளும் இருக்கின்றன என்று தேர்தல் அறிக்கை மற்றும் வேட்பாளர் பட்டியல் ஆகியவற்றை வெளியிடும் வரை சொல்லிவிட்டு திடீரென வெளியேற்றும் விதமாக நடந்து கொண்ட அவருக்கு எதிரான தங்களின் மன உணர்வுகளை வெளிப்படுத்தத்தான் இத்தனை ஆயிரம் பேர் கலந்து கொண்டிருக்கிறார்கள்.

வந்திருந்த அத்தனை பேருக்கும் அதிமுகவின் துரோகம்தான் மனதில் ஓடிக் கொண்டிருந்தது. தோழர்களிடம் ஏற்பட்டிருக்கிற இத்தனை பெரிய எழுச்சிக்கு அதிமுக தலைவியின் நடவடிக்கைதான் காரணம்” என்கிறார்.

இவருடைய உணர்வுகளைத் தான் அங்கு வந்திருந்த அத்தனை பேரும் பிரதிபலித்தார்கள். இடது சாரிகள் இல்லாமல் மத்தியில் யாரும் அரசு அமைத்துவிட முடியாது என்று அகில இந்திய பொதுச்செயலாளர் பிரகாஷ்காரத் முழங்கியபோதும், பிற்பகலில் நடந்த கலைநிகழ்ச்சிகளில் அதிமுகவை தூற்றியும், கேலி செய்தும் வசனங்கள் பேசப்பட்ட போதும் அரங்கம் ஆரவாரத் தால் அதிர்ந்தது. இந்த உணர்ச்சி வசப்பட்ட கட்டுக்கடங்காத கூட்டம்தான் தனித்து நிற்கும் தைரியத்தையும் வழங்கியது எனலாம்.

கால்படி நெல் அதிகமாக கூலி கேட்டதற்காக 44 உயிர்கள் கொளுத்தப்பட்டபோது நிலவிய அதே உத்வேகத்தோடு எழுந் திருக்கிறார்கள் மார்க்ஸிஸ்ட்கள். ஒரு லட்சம் பேர் திரளுவார்கள் என்று மூன்று நாட்களுக்கு முன்னதாகவே வெள்ளியன்று வெண்மணிக்கு ஆயத்த ஏற்பாடுகளை பார்வையிட வந்த எம்எல்ஏ பாலகிருஷ்ணன் தெரிவித்திருந்ததை கட்சியின் தோழர்கள் மெய்ப்பித்திருந்தார்கள்.

ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாகனங்களில் தமிழ்நாடு முழு வதிலுமிருந்தும் வந்திருந்தவர் களின் எண்ணிக்கை ஒரு லட்சத்தும் மேல் இருக்கும். சொல்லி அடித்திருக்கிறது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x