

கடந்த மக்களவைத் தேர்தலில் தமிழக மக்கள் பாஜக-வுக்கு வாக்களிக்காததால், தமிழர்களுக் கான திட்டங்களை பிரதமர் மோடி புறக்கணிக்கிறார் என்று தருமபுரியில் உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார்.
தருமபுரி மாவட்டத்தில் பாலக்கோடு சட்டப் பேரவை தொகுதி வேட்பாளர் பி.கே.முருகன் (திமுக), பென்னாகரம் இன்பசேகரன் (திமுக), தருமபுரி தடங்கம் சுப்பிரமணி (திமுக), பாப்பிரெட்டிப்பட்டி பிரபு ராஜசேகர் (திமுக), அரூர் குமார் (சிபிஎம்) ஆகிய வேட்பாளர்களுக்கு ஆதரவு கோரி நேற்று பல்வேறு இடங்களில் திமுக மாநில இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் வேன் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது அவர் பேசியது:
கடந்த மக்களவைத் தேர்தலில் தருமபுரி உட்பட தமிழகத்தின் அனைத்து தொகுதிகளிலும் திமுக வேட்பாளர்களை அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்தீர்கள். இந்தியா முழுக்க மோடி அலை வீசிய போதும், தமிழகத்தில் பாஜகவுக்கு வெற்றி கிடைக்கவில்லை. அந்த தீராத கோபம் காரணமாகத் தான் பிரதமர் மோடி தமிழகத்துக்கு எதற்கு நிதி கேட்டாலும் கொடுக்க மறுக்கிறார். திட்டங்களை தர மறுக்கிறார். வரும் தேர்தலில் மோடியையும், எடப்பாடி பழனிசாமியையும் உங்கள் வாக்குரிமை மூலம் நீங்கள் மதிப்பில்லாதவர்களாக்குங்கள்.
இவ்வாறு பேசினார்.
முன்னதாக, நேற்று முன்தினம் இரவு கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்ட உதயநிதி ஸ்டாலின், ஓசூர் தொகுதி திமுக வேட்பாளர் ஒய்.பிரகாஷை ஆதரித்து மத்திகிரியில் நடந்த பிரச்சார கூட்டத்தில் பேசும்போது, ‘‘ஓசூர் மத்திகிரி வளர்ச்சிக்கு சிப்காட்-2 கொண்டு வரப்பட்டது திமுக ஆட்சியில் தான். இப்பகுதி மக்களுக்காக ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர் திட்டத்தை நிறைவேற்றியது திமுக ஆட்சியில் தான். திமுக ஆட்சியில் ஓசூரில் தொடங்கப்பட்ட தகவல் தொழில்நுட்ப பூங்கா திட்டம், அதிமுக ஆட்சியில் முடங்கியுள்ளது. திமுக ஆட்சிக்கு வந்ததும் மீண்டும் செயல்பட தொடங்கும்,’’ என்றார்.