

சென்னையில் பல்வேறு சாலைகளில் சேதமடைந்து கிடக்கும் கழிவுநீர் குழிகளால் சாலைகளின் அளவு குறுகலாகி, போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது.
சென்னையில் கனமழையின்போது சாலையில் பெருக்கெடுத்து ஓடிய வெள்ளத்தால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. வீடுகளில் புகுந்த மழைநீரால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. தற்போது மழைநீர் பல இடங்களில் வடிந்துள்ளது. இருப்பினும் மழையால் பல இடங்களில் சேதமடைந்த சென்னை குடிநீர் மற்றும் கழிவுநீர் வாரியத்தின் கழிவுநீர் குழிகளால் தற்போது பல சாலைகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது.
கனமழையின்போது மழைநீர், கழிவுநீர் குழிகள் வழியாக வடிந்ததால் அவை முற்றிலும் சேதமடைந்துள்ளன. அவ்வாறு சேதமடைந்த குழிகளால் விபத்து ஏற்படுவதை தடுக்க, போலீஸார் மற்றும் பொதுமக்கள் தடுப்புகளை ஏற்படுத்தியுள்ளனர். இதனால் சாலையின் அகலம் குறுகி, வாகனங்கள் செல்ல முடியாமல் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. வியாசர்பாடி கல்யாணபுரம், மகாகவி பாரதியார் நகர் பஸ் நிலையம் அருகில், யானை கவுனி சாலை உள்ளிட்ட பல்வேறு சாலைகளில் கழிவுநீர் குழிகள் சேதமடைந்து சாலைகள் குறுகியுள்ளன.
வியாசர்பாடி கல்யாணபுரத்தை சேர்ந்த சேது இதுபற்றி கூறும்போது, “இப்பகுதியில் சேதமடைந்த கழிவுநீர் குழி கடந்த 15 நாட்களாக சரிசெய்யப்படாமல் கிடக்கிறது. தற்போது விசாயர்பாடி மேம்பாலம் திறக்கப்பட்டிருப்பதால், கல்யாணபுரம் சாலையில் போக்குவரத்து அதிகமாக உள்ளது. சேதமடைந்த குழியைச் சுற்றி ஏற்படுத்திய தடுப்பால் சாலை குறுகி, அவசரத்துக்கு ஆம்புலன்ஸ் கூட செல்ல முடியவில்லை. அதனால் உடனடியாக அதை சரிசெய்ய வேண்டும்” என்றார்.
இது தொடர்பாக சென்னை குடிநீர் வாரிய அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது, “கனமழையின்போது விரைவாக மழைநீர் வடிவதற்காக, பொதுமக்கள் மழைநீரை கழிவுநீர் குழாயினுள் விட்டுவிட்டனர். சில இடங்களில் குழியைச் சுற்றி கம்பிகளால் குத்தி சேதப்படுத்தி மழை நீரை வடியச் செய்துள்ளனர். இதனால் குழியினுள் மழை வெள்ளம் வேகமாகச் சென்று அவை சேதமடைந்து பள்ளம் ஏற்பட்டுள்ளது. தற்போது மழைநீர் வடிந்து வருவதால், சேதமான குழிகளை கண்டறிந்து சரிசெய்து வருகிறோம். கடந்த சில தினங்களில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட குழிகள் சரி செய்யப்பட்டுள்ளன” என்றார்.