தமிழ்நாட்டின் காவிரி உரிமையை நிலை நாட்டியது அதிமுகதான்: பல்லாவரம் பிரச்சாரத்தில் ஓ.பன்னீர்செல்வம் பெருமிதம்

தமிழ்நாட்டின் காவிரி உரிமையை நிலை நாட்டியது அதிமுகதான்: பல்லாவரம் பிரச்சாரத்தில் ஓ.பன்னீர்செல்வம் பெருமிதம்
Updated on
1 min read

தமிழ்நாட்டின் காவிரி உரிமையை நிலை நாட்டியது அதிமுக ஆட்சிதான் என்று அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்தார்.

ஆலந்தூர் வேட்பாளர் வளர்மதி, பல்லாவரம் வேட்பாளர் சிட்லபாக்கம் ராஜேந்திரன், தாம்பரம் வேட்பாளர் டி.கே.எம்.சின்னையா ஆகியோரை ஆதரித்து அவர் நேற்று பிரச்சாரம் மேற்கொண்டார். இப்பிரச்சாரத்தின்போது அவர் கூறியதாவது:

திமுக ஆட்சியின்போது கடுமையான மின்பற்றாக்குறை ஏற்பட்டது. ஆனால் தற்போது தமிழகத்தை மின்மிகை மாநிலமாக அதிமுக மாற்றியுள்ளது. நாம் தமிழகத்தின் தேவைக்கு போக பிற மாநிலத்துக்கு மின்சாரத்தை விற்பனை செய்து வருகிறோம்.

தஞ்சை டெல்டா பகுதியில் மீத்தேன் எடுக்க திமுக-காங்கிரஸ் ஆட்சியின்போது ஒப்பந்தம் போடப்பட்டது. ஆனால், டெல்டா பகுதிகளை பாதுகாக்க அதிமுக அரசு நடவடிக்கை மேற்கொண்டது. பின்னர் அதை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக எங்கள் அரசு மாற்றியுள்ளது.

தற்போது தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு சிறப்பாக பராமரிக்கப்படுகிறது. திமுக எதிர்க்கட்சியாக இருக்கும்போதே அக்கட்சியினர் அராஜகங்களில் ஈடுபடுகின்றனர். ஆட்சிக்கு வந்தால் என்ன ஆகும் என்பதை மக்கள் நினைத்து பார்க்க வேண்டும்.

வெளிநாடுகளில் இருந்து முதலீட்டாளர்கள் தொழில் தொடங்க முன் வருகின்றனர். தமிழகம் அமைதிப் பூங்காவாக இருப்பதால்தான் வெளிநாட்டினர் தொழில் தொடங்க போட்டி போடுகின்றனர். அதிமுக ஆட்சிக்கு வந்தால் முதியோர் ஓய்வூதியம், திருமண நிதியுதவியை உயர்த்தி தர உள்ளோம். அதிமுகவில் சொன்னால் செய்வார்கள்.

திமுக தேர்தல் அறிக்கை வெற்று காகிதம். கடந்த 2006-ம் ஆண்டு தேர்தலில் திமுகவினர் நிலம் இல்லாதவர்களுக்கு 2 ஏக்கர் நிலம் வழங்குவதாக கூறினர். ஆனால் வழங்கவில்லை. அதனால்தான் இருமுறை திமுகவை மக்கள் தோற்கடித்தனர். இந்த முறையும் திமுக தோற்கப்போவது உறுதி.

அதிமுக அரசு கூட்டுறவு வங்கியில் விவசாயிகள் வாங்கிய கடன் ரூ.12 ஆயிரம் கோடி அளவுக்கு தள்ளுபடி செய்துள்ளது. தமிழகத்தில் ஒரே ஆண்டில் 11 மருத்துவக் கல்லூரிகள் தொடங்க அனுமதி பெற்றுள்ளோம் என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in