

இளம்பெண் உடலில் இருந்தபெரிய அளவிலான புற்றுநோய் கட்டியை அகற்றி சென்னை அடையாறு புற்று நோய் மருத்துவமனை சாதனை படைத்துள்ளது.
இதுகுறித்து மருத்துவமனையின் புற்றுநோய் அறுவை சிகிச்சை நிபுணர் மருத்துவர் ஆனந்த்ராஜா கூறியதாவது:
கடந்த 6 மாதங்களாக 26 வயது இளம்பெண் ஒருவர் கடுமையான வயிற்று வலி, முதுகு வலியால் அவதிப்பட்டு வந்தார். அவருக்கு, மற்றொருமருத்துவமனையில் முதுகுதண்டுவட எலும்பு பகுதியில்புற்றுநோய் கட்டி கண்டறியப்பட்டது. அந்த கட்டி வயிற்று பகுதியில் படர்ந்து பெரிய அளவில் இருந்தது. இதனால், ரோடியோ தெரபி, கீமோ தெரபி ஆகிய சிகிச்சைகளை மேற்கொண்டுள்ளார். ஆனாலும், தொடர்ந்து வலிஅதிகரித்து கொண்டே வந்துள்ளது.
பின்னர், அடையாறு புற்றுநோய் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு பல்வேறு பரிசோதனைகள் செய்தபின், அறுவைசிகிச்சை செய்ய திட்டமிட்டோம். அதன்படி, 7 நிபுணர்களுடன் 16 மணி நேரம் அறுவை சிகிச்சை மேற்கொண்டோம். அந்த அறுவை சிகிச்சையின்போது முதுகு எலும்பில் வளர்ந்திருந்த கட்டியைஎலும்புடன் வெட்டி அகற்றப்பட்டது. அதேபோல், வயிற்று பகுதி முழுவதும் கட்டி படர்ந்து முக்கிய உறுப்புகளில் ஒட்டி காணப்பட்டது. குடல் மற்றும் ரத்த நாளங்கள் பாதிக்காத வகையில் புற்றுநோய் கட்டி அகற்றப்பட்டது. மிகவும் சிக்கலான அறுவை சிகிச்சையை, எங்கள் மருத்துவக் குழுவினர் பலமணி நேரம் போராடி வெற்றிகரமாக முடித்தனர்.
இந்தியாவிலேயே முதன் முறையாக இதுபோன்று புற்றுநோய் கட்டியை எங்கள் மருத்துவ குழுவினர் அகற்றி உள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.