

மேற்கு தொடர்ச்சி மலையில் பெய்த பலத்த மழையைத் தொடர்ந்து போடிமெட்டு மலைச்சாலையில் 10 இடங்களில் மண் சரிவு ஏற்பட்டது. இதனால் தமிழகம்-கேரளம் இடையே போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது.
தேனி மாவட்டம், மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் நேற்று முன்தினம் இரவு பலத்த மழை பெய்தது. அப்போது போடிமெட்டு மலைச்சாலையில் அடுத்தடுத்து 10 இடங்களில் மண் சரிவு ஏற்பட்டது. இதனால், இரு மாநிலங்களுக்கு இடையே போக்குவரத்து நேற்று முற்றிலும் துண்டிக்கப்பட்டது.
தகவல் அறிந்த மாவட்ட வருவாய், தேசிய நெடுஞ்சாலைத் துறையினர் பொக்லைன் இயந்திரம் மூலம் மண் சரிவை அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர். கேரளத்துக்கு செல்லும் அரசு பஸ்கள், சுற்றுலா வாகனங்கள் அனைத்தும் கம்பம்மெட்டு வழியாக திருப்பி விடப்பட்டன.
காட்டாற்று வெள்ளம்
தேசிய நெடுஞ்சாலைத் துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:
பத்துக்கும் மேற்பட்ட இடங்களில் மண் சரிவு ஏற்பட்டுள்ளது. அவற்றை அப்புறப்படுத்தும் பணியில் ஊழியர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். ஆனால், தொடர்ந்து மழை பெய்து வருவதால் காட்டாற்று வெள்ளம் ஏற்பட்டு ஆங்காங்கே மீண்டும் மண் சரிவு ஏற்பட்டு வருகிறது. சீரமைக்கும் பணி இன்றும் (வெள்ளிக்கிழமை) தொடரும்.