

மதகுபட்டி அருகே கைப்பையில் பணம் வைத்திருந்த அதிமுக ஒன்றியச் செயலாளர் உட்பட 14 பேர் மீது காவல்துறையினர் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
ஏப்ரல் 6-ம் தேதி தமிழகத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ளது. இதனை முன்னிட்டு தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளன. இதனால் உரிய ஆவணங்களின்றிக் கொண்டு செல்லப்படும் பணத்தைத் தேர்தல் பறக்கும் படையினர் கைப்பற்றி வருகிறார்கள்.
இன்று (மார்ச் 19) சிவகங்கை தொகுதியில் தேர்தல் பார்வையாளர் உத்தரவின் பெயரில், அதிமுக ஒன்றியச் செயலாளர் உட்பட 14 பேர் மீது காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இது தொடர்பாக தேர்தல் அலுவலரும் மாவட்ட ஆட்சியருமான பி.மதுசூதன்ரெட்டி கூறியதாவது:
"சிவகங்கை சட்டப்பேரவைத் தொகுதி பொதுப் பார்வையாளர் முத்துகிருஷ்ணன், சங்கரநாராயணன் உத்தரவுப்படி வட்டாட்சியர் பாலகிருஷ்ணன் தலைமையிலான நிலையான கண்காணிப்புக் குழுவினர் மதகுபட்டி அருகே திருப்பத்தூர் - சிவகங்கை சாலையில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது கார் மற்றும் மோட்டார் சைக்கிள்களில் சிலர் சந்தேகப்படும்படியாக நின்று கொண்டிருந்தனர். அவர்களை விசாரித்தபோது, முன்னுக்குப் பின் முரணாக பதிலளித்தனர்.
ஒவ்வொருவரிடமும் இருந்த கைப்பையில் ஒரு நோட்டுப் புத்தகமும், அதில் 50 போ் கொண்ட பெயர்ப் பட்டியலும் இருந்தது. அவர்களிடம் 500 ரூபாய் நோட்டுகளாக ரூ.15 ஆயிரம் ரொக்கம் இருந்தது. மேலும், விசாரணையில் அவர்களின் பெயர்கள் அருள் ஸ்டீபன், சண்முகராஜா, செல்வராஜ், பாலசுப்ரமணியன், வெங்கடேஷ், செந்தில், பெருமாள், விஜயராமன், மூர்த்தி, கருப்பையா, பொரியகருப்பன், மனோகரன், அந்தோணி, விஸ்வநாதன் என்பது தெரியவந்தது.
இதையடுத்து அவர்கள் மீது மதகுபட்டி காவல்துறையினர் வழக்குப் பதிந்துள்ளனர். மேலும், இதேபோல் தேர்தல் விதிமுறைகளை மீறுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்".
இவ்வாறு சிவகங்கை ஆட்சியர் பி.மதுசூதன்ரெட்டி தெரிவித்தார்.
இதில் அருள்ஸ்டீபன் அதிமுக காளையார்கோவில் ஒன்றியச் செயலாளராக உள்ளது குறிப்பிடத்தக்கது.