

சமூக ஊடகங்களில் மீள்பதிவு செய்யப்படும் அரசியல் கட்சித் தலைவர்களின் பழைய வீடியோக்களைப் பார்த்து நடுநிலையாளர்கள், கட்சி சார்பற்றவர்கள் குழப்பத்தில் ஆழ்ந்துள்ளனர்.
தமிழகத்தில் ஏப். 6-ல் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறும் நிலையில் முகநூல், வாட்ஸ்அப் உள்ளிட்ட சமூக ஊடகங்களில் அரசியல் கட்சிகளின் பிரச்சாரம் களைகட்டி வருகிறது.
முந்தைய தேர்தல்களில் ஒரு கூட்டணியிலும், தற்போது இன்னொரு கூட்டணியிலும் இருக்கும் தலைவர்கள் முந்தைய காலங்களில் தற்போதைய கூட்டணிக் கட்சித் தலைவர்களை விமர்சித்துப் பேசிய வீடியோக்களை தேடித் தேடி சமூக ஊடகங்களில் பதிவேற்றப்படுகிறது.
2016 தேர்தலில் அதிமுக, பாஜக, பாமக தனித்துப் போட்டியிட்டன. மதிமுக, விடுதலை சிறுத்தைகள், கம்யூனிஸ்ட்டுகள் (தற்போது திமுக கூட்டணியில் உள்ளன), மற்றும் தேமுதிக (தற்போது அமமுக கூட்டணியில் உள்ளது) 3-வது அணியாகத் தேர்தலைச் சந்தித்தது. நாம் தமிழர் கட்சி தனித்துப் போட்டியிட்டது. மக்கள் நீதி மய்யம் அப்போது ஆரம்பிக்கப்படவில்லை.
கடந்த தேர்தலில் அப்போதைய முதல்வர் ஜெயலலிதா, ஒவ்வொரு கூட்டங்களிலும் பாஜகவை கடுமையாக விமர்சித்து வந்தார். பாஜகவுடன் இனிமேல் எக்காலத்திலும் அதிமுக கூட்டணி அமைக்காது என்றார். பாமக தலைவர் ராம்தாஸ், அவரது மகன் அன்புமணி ஆகியோர் ஜெயலலிதா, எடப்பாடி பழனிச்சாமி, ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரை கடுமையான வார்த்தைகளால் விமர்சனம் செய்தனர். திமுக தலைவர் கருணாநிதி, மு.க.ஸ்டாலினை மதிமுக பொதுச் செயலர் வைகோ கடுமையாகச் சாடினார்.
இந்த வீடியோக்கள் தற்போது சமூக ஊடகங்களில் மீள்பதிவு செய்யப்படுகின்றன. பாஜகவை ஜெயலலிதா விமர்சித்துப் பேசிய வீடியோக்கள் மற்றும் அதிமுக தலைவர்களை ராமதாஸ், அன்புமணி ஆகியோர் விமர்சனம் செய்த வீடியோக்கள், பாஜக தலைவர்கள் அதிமுக தலைவர்களை விமர்சனம் செய்த வீடியோக்கள், அமைச்சர்களின் குளறுபடியான பேச்சுக்கள் அடங்கிய வீடியோக்களை திமுகவினரும், திமுக தலைவரைப் பற்றி வைகோ பேசியதை அதிமுக, பாஜகவினரும் சமூக ஊடகங்களில் பரப்பி வருகின்றனர்.
திமுக தலைவர்கள், திருமாவளவனின் இந்து விரோத பேச்சுக்கள், 2ஜி அலைக்கற்றை முறைகேடுகளை பாஜகவினர் பரப்புகின்றனர்.
அதிமுக சார்பில் தயாரிக்கப்பட்டு சமூக ஊடகங்கள், டிவிக்களில் ஒளிபரப்பப்படும் தேர்தல் விளம்பரங்களை, திமுக விளம்பரமாக டப்பிங் செய்து திமுகவினர் ஒளிபரப்பி வருகின்றனர்.
ஒவ்வொரு கட்சிகளும் எதிர்தரப்பினரைக் கிண்டல் செய்து தயாரித்த மீம்ஸ்களையும் சளைக்காமல் பதிவேற்றம் செய்கின்றன. சமூக ஊடகங்களில் அதிகளவில் மறுபதிவு செய்யப்படும் அரசியல் விளம்பரங்கள், வீடியோக்கள், பதிவுகளைப் புதிதாகப் பார்ப்பவர்கள், நடுநிலையாளர்கள், கட்சி சார்பற்றவர்கள் எது உண்மை, எது பொய் என்பது தெரியாமல் குழப்பத்தில் ஆழ்ந்துள்ளனர்.