

மதவெறியைத் தூண்டி, மக்களைப் பிரித்து, மொழிகளைத் திணிக்கும் மோடி மஸ்தான் வேலை இங்கு எடுபடாது என்று தனது ட்விட்டர் பதிவில் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுக்காக பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். திமுக தலைவர் ஸ்டாலின் தொடர்ச்சியாக பல்வேறு ஊர்களில் திமுக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் செய்து வருகிறார்.
இன்று (மார்ச் 19) திருப்பூர் வடக்கு, திருப்பூர் தெற்கு, அவிநாசி, கிணத்துக்கடவு, சூலூர், பொள்ளாச்சி, தொண்டாமுத்தூர் தொகுதி மக்களிடையே திமுக கூட்டணி வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்டினார். அதன் புகைப்படங்களைத் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து திமுக தலைவர் ஸ்டாலின் கூறியிருப்பதாவது:
"சுயமரியாதை, சமூகநீதி, சமத்துவத்தைப் போற்றிப் பாதுகாத்த தமிழ் நிலம் இது! பெரியார் - அண்ணா - கலைஞர் பண்படுத்திய திராவிட மண் இது. மதவெறியைத் தூண்டி, மக்களைப் பிரித்து, மொழிகளைத் திணிக்கும் மோடி மஸ்தான் வேலை இங்கு எடுபடாது. துணைபோகும் ஒவ்வொருவரையும் மக்கள் விரட்டியடிப்பர்"
இவ்வாறு மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.