

திருவண்ணாமலை சட்டப்பேரவைத் தொகுதியில் பாஜக வேட்பாளரை எதிர்த்து அதிமுக வழக்கறிஞர் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
அதிமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள பாஜகவுக்கு திருவண்ணாமலை சட்டபேரவைத் தொகுதி ஒதுக்கப்பட்டது. அதன்படி, திருவண்ணாமலை சட்டப்பேரவைத் தொகுதியில் பாஜக சார்பில் மாநில வர்த்தகர் அணித் துணைத் தலைவர் தணிகைவேல் போட்டியிடுவார் என பாஜக தலைமை அறிவித்தது.
இதையடுத்து, திருவண்ணாமலை கோட்டாட்சியர் அலுவலகத்தில் தேர்தல் நடத்தும் அலுவலரும், கோட்டாட்சியருமான வெற்றிவேலிடம் தணிகை நேற்று வேட்பு மனு தாக்கல் செய்தார். அப்போது அவருடன் பாஜக மாநில பொதுச் செயலாளர் கேடி ராகவன் மற்றும் நிர்வாகிகள் உடனிருந்தனர்.
இந்த நிலையில், பாஜகவுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட திருவண்ணாமலை சட்டப்பேரவைத் தொகுதியில் போட்டியிட அதிமுக வழக்கறிஞர் அன்பழகன்(முன்னாள் அரசு தரப்பு வழக்கறிஞர்) நேற்று வேட்பு மனு தாக்கல் செய்துள்ளார். அவர், அதிமுக சார்பில் போட்டியிடபோவதாக மனுவில் குறிப்பிட்டுள்ளார்.
இது குறித்து அதிமுக தரப்பில் விசாரித்தபோது, “கட்சி மேலிடத்தின் உத்தரவுபடி அன்பழகன் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளதாகவும், வேட்பு மனு பரிசீலனைக்கு பிறகு இறுதி முடிவு எடுக்கப்படும்” என கூறுகின்றனர்.
அதேபோல் பாஜக தரப்பில் கேட்டபோது, அதிமுகவைச் சேர்ந்த அன்பழகன் மனு தாக்கல் செய்துள்ளது குறித்து மாநில தலைமைக்கு தகவல் தெரிவித்துள்ளோம் என்றனர்.
பாஜகவுக்கு எதிராக அதிமுக வழக்கறிஞர் மனு தாக்கல் செய்துள்ளது, கூட்டணியில் திடீர் குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளது.