

சிவகங்கை மாவட்டம் இளையான்குடி அருகே தாயமங்கலத்தில் சர்க்கஸ், ராட்டினம் தொழிலாளர்களை போலீஸார் விரட்டியடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
இளையான்குடி அருகே தாயமங்கலம் முத்துமாரியம்மன் கோயில் பங்குனி பொங்கல் திருவிழா மார்ச் 23-ம் தேதி தொடங்கி, ஏப்.2-ம் தேதி வரை நடக்கிறது. திருவிழாவையொட்டி கோயில் அருகே ராட்டினம் அமைக்கப்படுவது வழங்கம்.
இதில் கொலம்பஸ், பிரேக்டான்ஸ், டிராகன் கோஸ்ட், மோட்டார் சைக்கிள் சர்க்கஸ் உள்ளிட்ட வகையான ராட்டினங்கள், சிறுவர், குழந்தைகளுக்கான விளையாட்டு சாதனங்கள் இடம்பெறும்.
இதையடுத்து வழக்கம்போல் சர்க்கஸ், ராட்டினம் தொழிலாளர்கள் வருவாய், பொதுப்பணி உள்ளிட்ட துறைகளிடம் அனுமதி பெற்று தாயமங்கலத்தில் ராட்டினம் சாதனங்களை பொருத்தும் பணியில் ஈடுபட்டனர்.
இந்நிலையில் அங்கு வந்த போலீஸார் ராட்டினம் அமைக்கக் கூடாது என விரட்டினர். தொழிலாளர்கள் செல்ல மறுத்து போலீஸாரிடம் வாக்குவாதம் செய்தனர்.
ஆனால் போலீஸார் விடாப்படியாக இருந்ததால் வேறுவழியின்றி சாதனங்களை லாரியில் ஏற்றினர்.
இதுகுறித்து ராட்டினம் தொழிலாளர்கள் கூறியதாவது:
கரோனாவால் கடந்த ஆண்டு முழுவதும் கோயில் திருவிழாக்கள் நடக்கவில்லை. இதனால் நாங்கள் சாப்பிடுவதற்கே சிரமப்பட்டோம். தற்போது தான் திருவிழாக்களுக்கு அனுமதி கொடுத்துள்ளனர். பல இடங்களில் ராட்டினம் அமைத்துள்ளனர். ஆனால் தாயமங்கலத்தில் ராட்டினம் அமைக்க போலீஸார் அனுமதி தர மறுக்கின்றனர்.
ஆனால் மற்றத்துறை அதிகாரிகள் அனுமதி கொடுத்துவிட்டனர். இத்தொழில் மூலம் 80 தொழிலாளர்கள் வாழ்க்கை நடத்தி வருகின்றனர். ராட்டினம் அமைக்க மாவட்ட ஆட்சியர் அனுமதி தர வேண்டும், என்று கூறினர்.
இதுகுறித்து மானாமதுரை தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் தனலட்சுமி கூறுகையில், ‘‘ திருப்புவனம் புஷ்பவனேஸ்வரர் கோயில் திருவிழாவிற்கு ராட்டினம் அமைக்க ஏற்கெனவே அனுமதி கொடுத்துள்ளோம். அங்கே ராட்டினம் அமைத்துள்ளனர். அதேபோல் தாயமங்கலத்திலும் ராட்டினம் அமைக்க எங்களுக்கு ஆட்சேபனை இல்லை’’ என்று கூறினார்.
இதுகுறித்து போலீஸார் கூறுகையில், ‘கரோனா பரவி வருவதால் ராட்டினத்திற்கு அனுமதி தரவில்லை,’ என்று கூறினார்.