Published : 20 Mar 2021 11:33 AM
Last Updated : 20 Mar 2021 11:33 AM

மக்களும் கட்சியுமே எனது சொத்து; குடிசை வீட்டிலிருந்து கோட்டையை நோக்கிய பயணம்: கம்யூனிஸ்ட் வேட்பாளர் மாரிமுத்து பேட்டி

தன் வீட்டின் முன்பு வேட்பாளர் மாரிமுத்து.

திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டி (தனி) தொகுதி, திமுக கூட்டணியில் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கோட்டூர் ஒன்றியச் செயலாளர் க.மாரிமுத்து (வயது 49) போட்டியிடுகிறார். 20 ஆண்டுகளுக்கு மேலாகக் கட்சிப் பணியாற்றியுள்ள மாரிமுத்து, கடந்த 13 ஆண்டு காலமாக கோட்டூர் ஒன்றியச் செயலாளராக உள்ளார். இவர், விவசாயக் கூலிகளான கண்ணு - தங்கம்மாள் தம்பதியரின் மகனாவார். இன்றும் அவருடைய மனைவி ஜெயசுதா, விவசாயக் கூலி வேலைக்குச் சென்று ஈட்டும் பணமே குடும்ப வருமானம்.

ரூ.58 ஆயிரம், மனைவியிடம் சேமிப்பு ரூ.1,000, 3 பவுன் தங்கச் சங்கிலி, 66 சென்ட் நிலம் உட்பட சுமார் ரூ.3 லட்சத்துக்கு இவரது சொத்து மதிப்பு உள்ளதாக வேட்புமனுவில் தெரிவித்துள்ளார்.

புயல், தொடர் மழை போன்ற பேரிடர் ஏற்பட்டாலும் இவரது வீடு நிவாரண முகாமில்தான் தங்கும் சூழல் உள்ளது. கடந்த கஜா புயலில் சேதமடைந்த தன் குடிசை வீட்டைச் சீரமைக்க அரசு சாரா தொண்டு நிறுவனம் வழங்கிய ரூ.50 ஆயிரத்தை, அந்த நிவாரணம் கிடைக்காத இன்னொருவருக்கு வழங்கியுள்ளார்.

கட்சிப் பணியும் போராட்டமுமே வாழ்க்கை, அதைத் தவிர வேறு வாழ்க்கையில்லை என்கிறார் மாரிமுத்து. 'இந்து தமிழ் திசை' சார்பாக அவரிடம் பேசினோம்.

தேர்தலில் போட்டியிட உங்களுக்கு எப்படி சீட் கிடைத்தது?

நான் இளைஞர். கட்சியில் தீவிரமான போராட்டங்களை முன்னின்று நடத்தியுள்ளேன். இந்த நம்பிக்கையின் அடிப்படையில் என்னை நிறுத்தியுள்ளனர். மக்களின் அடிப்படைப் பிரச்சினைகளைத் தீர்ப்பதில் நான் முன்மாதிரியாக இருப்பேன் என தொகுதி மக்கள் நம்புகின்றனர். அரசியல் வாழ்க்கையில் அப்பழுக்கற்றவனாக இருக்கிறேன்.

உங்களின் எளிமை காரணமாக மூத்த தலைவர் நல்லகண்ணுவுடன் நீங்கள் ஒப்பிடப்படுகிறீர்களே?

ஐயய்யோ, அதெல்லாம் இல்லை. சிலர் மனதில் பட்டதை எழுதுகின்றனர். அவர் 'ஜீனியஸ்'. அவருடன் என்னை ஒப்பிட முடியாது. நான் சாதாரண ஆள்.

ஏழ்மையான நிலையில், இடதுசாரி இயக்க அரசியலில் உங்களை நகர்த்தியது எது?

இந்தப் பகுதி நிறைய நிலப்பிரபுக்கள், நிலச்சுவான்தாரர்கள் இருந்த இடம். பெரும்பான்மையான மக்கள் விவசாயக் கூலித் தொழிலாளிகளே. குத்தகைதாரர்களுக்கு நில உரிமையை வலியுறுத்தி கம்யூனிஸ்ட் கட்சி போராட்டம் நடத்தியிருக்கிறது. அந்தப் போராட்டங்கள் இங்கு வெற்றி பெற்றிருக்கின்றன. அதேபோல், கூலி கேட்டு நடத்திய போராட்டமும் வெற்றி பெற்றிருக்கிறது. இப்படி கம்யூனிஸ்ட் கட்சி நடத்திய போராட்டங்களின் வெற்றிதான் அதில் இணைய வேண்டும் என்ற உந்துதலைத் தந்தது.

போராட்டங்களின் வழியாகத்தான் ஒவ்வொரு பிரச்சினையையும் தீர்க்க வேண்டிய சூழல். விவசாயிகளின் உரிமைகளுக்கான போராட்டங்கள், வறட்சி, புயல் காலங்களில் இழப்பீடு கோரி போராட்டங்கள், நெல்லுக்கு உரிய விலை கோரி போராட்டங்கள் நடத்துவோம். எங்கள் பகுதியில் விவசாயத் தொழிலாளர்கள்தான் அதிகம். அவர்கள் குடியிருக்கும் வீடுகளுக்கு பட்டா இல்லை. அதற்கான போராட்டங்களை நடத்தியிருக்கிறோம். நான் முன்னின்று மக்களின் பிரச்சினைகளைத் தீர்க்க வேண்டும் என்ற உந்துதல்தான் இடதுசாரி இயக்கத்தில் என்னை இணைத்தது. இதைவிடப் பெரிய வாழ்க்கை இல்லை என்பதுதான் என் எண்ணமாக இருந்தது.

இடதுசாரி இயக்கங்கள் சமீபகாலமாக நிலம் சார்ந்த மக்கள் நலன் சார்ந்த பிரச்சினைகளுக்கு முன்னின்று போராட்டங்களை நடத்துவதில்லை என்ற குற்றச்சாட்டு இருக்கிறதே?

கீழத்தஞ்சையில் குறிப்பாக, திருத்துறைப்பூண்டியில் இன்னும் உயிர்ப்பாக பல போராட்டங்கள் நடக்கின்றன. இளைஞர்கள் சக்தி வலுவாக இருக்கிறது. நாங்கள் நடத்தும் போராட்டங்கள் வெளிச்சத்துக்கு வராததே இத்தகைய விமர்சனங்களுக்குக் காரணம்.

உதாரணமாக, எங்கள் பகுதியில் இரு குழந்தைகள் வறுமை காரணமாக இறந்தனர். அதற்கு நாங்கள் பெரிய போராட்டம் நடத்தினோம். கம்யூனிஸ்ட் உறுப்பினர்கள் சட்டப்பேரவையில் இப்பிரச்சினையை எழுப்பினர்.

உழுதவனுக்கே நிலம் சொந்தம் என்பது எங்களுடைய போராட்டம்தான். கருணாநிதி ஆட்சியில் 1989இல் நிலச்சுவான்தாரர்களிடமிருந்து நிலங்களைப் பிரித்து சாதாரண நிலமற்ற விவசாயத் தொழிலாளர்களுக்கு கொடுத்தனர்.

இப்போது காலம் மாறியிருக்கிறது, பிரச்சினைகளும் மாறியுள்ளன. நிலமற்ற விவசாயிகள் தங்களுக்கான நில உரிமை வேண்டும் என நினைக்கும் அளவுக்கு விழிப்புணர்வு பெற்றுள்ளனர். விவசாயிகளுக்கு உரிய விலை கிடைக்க வேண்டும், விவசாயக் கடன்கள் கொடுக்க வேண்டும் ஆகியவற்றை முன்னிறுத்தி இப்போது போராட்டம் நடத்துகிறோம்.

இன்னும் திருத்துறைப்பூண்டி தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் கூரை வீடுகளே காட்சியளிக்கின்றன. இந்தியக் கம்யூனிஸ்ட் அதிக முறை வென்ற தொகுதி இது. தேர்தல் அரசியலின் மூலம் மாற்றம் கொண்டு வருவதில் தடைகள் இருக்கிறதா?

எல்லோரும் குரல் கொடுத்திருக்கின்றனர். மணலி கந்தசாமி, சுப்பையா, பழனிசாமி, உலகானந்தன் போன்றவர்கள் பேசியிருக்கின்றனர். பலருடைய அனுபவங்கள் பல பிரச்சினைகளைத் தீர்த்து வைத்துள்ளன. நிறைய திட்டங்களைச் செயல்படுத்தியும் இருக்கின்றனர். குடியிருப்பு மனை கொடுக்க வேண்டும் என்பதே கம்யூனிஸ்ட் கட்சி சட்டப்பேரவையில் பேசியதுதான். சில இடங்களில் பட்டா கிடைக்காது. சிறிய சட்டச் சிக்கல்கள் தொடர்கின்றன.

ஆற்றங்கரையில் வசிப்பவர்கள், குடிசை வீடுகளில் இருப்பவர்கள், வீட்டுமனைப் பட்டா இல்லாதவர்களுக்கு அரசாங்கத்துடன் பேசி அவர்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவோம். குடிசை இல்லாத தொகுதியாக மாற்ற முடியும் என நம்பிக்கை இருக்கிறது. அதற்கான போராட்டங்களைக் கடுமையாக முன்னெடுப்போம்.

விவசாயிகள், விவசாயக் கூலித் தொழிலாளர்களுக்கு உங்களின் குரல் சட்டப்பேரவையில் எப்படி ஒலிக்கும்?

விவசாயிகளுக்கு உற்பத்தி செலவுக்கேற்ற, பொருத்தமான லாபம் கிடைக்கும் வகையில் விலை நிர்ணயம் செய்ய குரல் கொடுப்பேன். உற்பத்திப் பொருள்களுக்கான சந்தை மதிப்பை உயர்த்திக் கொடுக்க வலியுறுத்துவேன்.

முதல்வர் எடப்பாடி பழனிசாமி தன்னை விவசாயி எனக் கூறுவதை எப்படிப் பார்க்கிறீர்கள்?

வேளாண் திருத்தச் சட்டங்களை எதிர்த்து டெல்லியில் விவசாயிகள் 100 நாட்களுக்கு மேல் போராடுகின்றனர். அவர் கவலைப்படவில்லை, ஆதரித்துப் பேசிவிட்டு இங்கு வந்து விவசாயி மகன் என்கிறார். அவருடைய பேச்சில் முரண் இருக்கிறது.

தலித் மக்கள் மீதான வன்கொடுமைகள் இன்னும் தொடர்கிறதே?

எங்கள் பகுதி மட்டுமல்லாமல் தமிழகத்தைப் பொறுத்தவரை, பெரியார், அண்ணா, கருணாநிதி, ஜீவா ஆகியோர் நடத்திய போராட்டங்களின் விளைவால் மக்கள் விழிப்புணர்வு அடைந்திருக்கின்றனர். மாற்றம் வந்திருக்கிறது.

எளியவர்களுக்கு தமிழக அரசியலில் இன்னும் இடம் இருக்கிறது என நினைக்கிறீர்களா?

நிச்சயமாக இருக்கிறது. நாங்கள் வாக்கு சேகரிக்கும் இடங்களிலெல்லாம் பெரிய வரவேற்பு இருக்கிறது. யாரும் எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் எங்கள் கூட்டணிக் கட்சித் தலைவர்களும் தோழர்களும் சிறப்பாகச் செயல்படுகின்றனர். பணம் எங்கள் அணிக்குப் பொருட்டல்ல. நீண்ட காலமாகப் பல போராட்டங்களை முன்னின்று நடத்தியிருக்கிறோம். நம் தேவைகளைச் சொல்ல வேண்டிய இடத்தில் சொல்வார், போராடுவார் என மக்கள் நம்புகின்றனர்.

குடிசை வீடு, பழைய இருசக்கர வாகனம் என ஏழ்மை நிலையில் அரசியல் களம் என்பது அழுத்தமாக இல்லையா?

ஏழ்மை என்பதெல்லாம் குடும்பத்தில் இருக்கும் பிரச்சினைகள்தான். தோழர்கள் எங்களுக்காக இருக்கிறார்கள். சில மாதங்களில் கேஸ் சிலிண்டர் வீட்டுக்கு வாங்க முடியாமல் இருக்கும். பற்றாக்குறை வாழ்க்கையில் எங்களுக்கு இதெல்லாம் சாதாரணம். அவை குறையாகத் தெரியவில்லை. இதுதான் எங்கள் வாழ்க்கை. நான் அப்படித்தான் கடந்து வந்திருக்கிறேன். இது பெரிய அழுத்தம் இல்லை. மக்களும் கட்சியுமே எனது சொத்து.

உங்களை எதிர்த்துப் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் சுரேஷ்குமார் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?

அவரை பலமானவராகவோ, அவர் கட்சிக்கு பலம் இருப்பதாகவோ நான் கருதவில்லை.

கருணாநிதி இல்லாமல் சந்திக்கும் முதல் சட்டப்பேரவைத் தேர்தலில் திருவாரூர் மாவட்டம் எப்படி இருக்கிறது?

தலைவரிடம் நேரடியாக அறிமுகம் இல்லை. ஆனால், படித்திருக்கிறோம். அவை நம்பிக்கையை ஏற்படுத்தியிருக்கிறது. அந்த பாரம்பரியத்தில் வந்த தலைவர்கள் இருக்கின்றனர். அவரின் கொள்கையை முன்னெடுத்துச் செல்லும் இளைஞர்கள் இருக்கின்றனர். வெற்றிடம் இல்லை. கருணிநிதி மண்ணின் மைந்தர். அவர் இல்லாத வருத்தம் இருக்கிறது. இருந்தாலும் ஸ்டாலின் இருக்கிறார். கருணாநிதி மாதிரிதான் ஸ்டாலினும்.

தொடர்புக்கு: nandhini.v@hindutamil.co.in

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x