

தமிழக வளர்ச்சித் திட்டங்களை நிறைவேற்றவே மத்திய அரசுடன் இணக்கமான உறவு வைத்திருக்கிறோம் என விருத்தாச்சலத்தில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி தெரிவித்தார்.
தமிழகம் முழுவதும் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுவரும் முதல்வர் பழனிசாமி, இன்று விருத்தாச்சலம் தொகுதியில் போட்டியிடும் பாமக கூட்டணி வேட்பாளர் கார்த்திகேயன் மற்றும் திட்டக்குடியில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் தடா து.பெரியசாமி ஆகியோருக்கு வாக்குக் கேட்டு, பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.
அப்போது அவர் பேசுகையில், ''தமிழக மக்களின் நலன் கருதியே கூட்டணி அமைக்கப்பட்டுள்ளது. மத்திய, மாநில அரசுகள் சரியான புரிதலோடு இருந்தால்தான் மக்கள் நலத் திட்டங்களைச் செயல்படுத்த முடியும். ஒரு வாகனத்திற்கு இரு சக்கரங்கள் இருந்தால் இயக்க முடியும். அந்த இரு சக்கரங்கள் போன்றதுதான் மத்திய, மாநில அரசுகள். எனவே, தமிழக வளர்ச்சியை அடிப்படையாகக் கொண்டும், மக்களுக்குத் தேவையான திட்டங்களைச் செயல்படுத்தவும், மக்கள் எண்ணங்களைப் பிரதிபலிக்கும் வகையில் கூட்டணி ஏற்படுத்தப்பட்டுள்ளது.
மத்திய அரசுடன் இணக்கமான உறவு கொண்டிருந்தால் தமிழகத்திற்குத் தேவையான நிதியைப் பெற முடியும் என்பதோடு, காவிரி- குண்டாறு திட்டத்தை நிறைவேற்ற ரூ.80 ஆயிரம் கோடி தேவைப்படும். அதையும் பெற வேண்டும்.
கடந்த 1999-ம் ஆண்டு பாஜகவுடன் கூட்டணி அமைத்த திமுக, தற்போது அதிமுக கூட்டணி வைத்திருப்பதை விமர்சிக்கிறது. அவ்வப்போது பச்சோந்தியைப் போன்று கூட்டணி மாறுவது திமுகவின் பழக்கம்.''
இவ்வாறு பழனிசாமி தெரிவித்தார்.