

மதுரை மத்திய தொகுதியில் அதிமுகவில் முக்கிய பிரபலமும், அமைச்சர் செல்லூர் கே.ராஜூவின் தீவிர ஆதரவாளருமான கிரம்மர் சுரேஷ் இன்று சுயேச்சையாக போட்டியிட மனு தாக்கல் செய்தது, அதிமுக வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
மதுரை மாநகர அதிமுகவில் கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் கே.ராஜூவின் நிழலாகப் பின்தொடர்பவர் கிரம்மர் சுரேஷ். ஆரம்ப காலத்தில் முன்னாள் திமுக சபாநாயகர் மறைந்த பிடிஆர்.பழனிவேல்ராஜன் ஆதரவாளராக இருந்தார்.
அவர் இறந்தபின், அதிமுகவில் சேர்ந்தார். அதிமுகவில் சேர்ந்தபிறகு மாநகரத்தில் எந்த கட்சிக்கூட்டம், பொதுக்கூட்டம், மற்ற அரசு நிகழ்ச்சிகள் நடந்தாலும், ஜெயலலிதாவையும், செல்லூர் கே.ராஜூவையும் புகழ்ந்து பிரம்மாண்ட போஸ்டர் ஓட்டுவதிலும், வரவேற்பு கொடுப்பதிலும் கிரம்மர் சுரேஷ் தனி முத்திரை பதித்து வந்தார்.
கடந்த சட்டமன்ற தேர்தலிலே இவர் மதுரை மத்திய தொகுதியில் ‘சீட்’ கேட்டிருந்தார். ஆனால், கிடைக்கவில்லை. ஆனாலும், மனம் தளராமல் செல்லூர் கே.ராஜூ ஆதரவாளராக அவரை பின்தொடர்ந்தார்.
கடந்த 2018ம் ஆண்டு அமைச்சர் செல்லூர் கே.ராஜூவுக்கு, மாநகர ஜெ., பேரவை செயலாளர் பதவி வாங்கி கொடுத்தார். ஆனால், ஜெ., பேரவை மாநிலச் செயலாளரான அமைச்சர் ஆர்பி.உதயகுமார், தன்னுடைய கவனத்திற்கு கொண்டு வராமலேயே அவர் நியமிக்கப்பட்டதாகக் கூறி அவரைப் பதவி கிடைத்த ஒரே நாளில் நீக்கினார்.
அதைக் கூட செல்லூர் கே.ராஜூவால் தடுக்க முடியவில்லையே என்று அப்போதே அவர் மீது கிரம்மர் சுரேஷ் மனவருத்தம் அடைந்தார். அதன்பிறகு செல்லூர் கே.ராஜூ அவருக்கு மற்றொரு சார்பு அணியான எம்ஜிஆர் இளைஞர் அணி இணைச் செயலாளர் பதவி வழங்கி அவரை சமாதானம் செய்தார்.
மேலும், மாநகராட்சி மேயர் தேர்தலில் ‘சீட்’ பெற்றுத் தருவதாகவும் உறுதியளித்து இருந்தார். ஆனால், மதுரை மாநகராட்சி பெண்களுக்கு ஒதுக்கப்பட்டது. அதனால், இந்தத் தேர்தலில் மதுரை மத்திய தொகுதியில் ‘சீட்’ கேட்டு வந்தார். அமைச்சர் செல்லூர் கே.ராஜூ மாநகரச் செயலாளராக இருப்பதால் அவரால் ‘சீட்’ பெற்றுக் கொடுக்க முடியும் என நம்பி வந்தார்.
மாநகரத்தில் உள்ள மதுரை மேற்கில் செல்லூர் கே.ராஜூ போட்டியிட்டார். கிரம்மர் சுரேஷ் கேட்ட மத்திய தொகுதி கூட்டணி கட்சிக்கு ஒதுக்கப்பட்டது.
வடக்கு தொகுதி பாஜகவிற்கு ஒதுக்கப்பட்டது. தெற்கு தொகுதியில் ஆ.ர்பி.உதயகுமார் ஆதரவாளர் சரவணனுக்கு ‘சீட்’ கொடுக்கப்பட்டது.
செல்லூர் கே.ராஜூவால் தனக்கு ‘சீட்’ வாங்கிக் கொடுக்க முடியாததால் கிரம்மர் சுரேஷ், அவர் மீது அதிருப்தியடைந்தார். கடந்த சில நாட்களாக ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்தி வந்த அவர், நேற்று மதுரை மத்திய தொகுதியில் சுயேச்சையாக வேட்புமனு தாக்கல் செய்தார்.
அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், ‘‘நான் ஆளும்கட்சியாக திமுக இருந்தபோதே அக்கட்சியில் இருந்து விலகி அதிமுகவில் சேர்ந்தேன். பல்வேறு போராட்டங்கள், ஆர்ப்பாட்டங்களை முன்னின்று நடத்தியுள்ளேன். அதிமுகவில் வாய்ப்பு கேட்டேன் கிடைக்கவில்லை. உழைப்பவர்களுக்கு வாய்ப்பு வழங்குவதுதான் நல்ல தலைமை. மற்றவர்களைப் போல், கட்சித்தலைமையை எப்படி திருப்தி செய்து ‘சீட்’ பெறுவது என்பது எனக்கு தெரியவில்லை.
ஜெயலலிதா தொண்டர்களுக்கு வாய்ப்பு வழங்கி அவர்களை தலைவராக்குவார். ஆனால், தற்போது அந்தநிலை இல்லை. மத்திய தொகுதி மக்களுக்காக பல்வேறு சேவைகளை செய்துள்ளேன். மக்களை நம்பி களம் இறங்கியுள்ளேன், ’’ என்றார்.