

ராஜீவ் கொலைக் கைதி ரவிச்சந்திரனுக்கு பரோல் விடுமுறை வழங்கக்கோரிய வழக்கில், அவர் பரோல் விடுமுறையை ஒரு உரிமையாக கோர முடியாது என சிறைத்துறை தெரிவித்துள்ளது.
முன்னாள் பிரதமர் ராஜிவ்காந்தி கொலை வழக்கில் மதுரை மத்திய சிறையில் 28 ஆண்டுகளாக ஆயுள் தண்டனை அனுபவித்து வருபவர் அருப்புக்கோட்டையைச் சேர்ந்த ரவிச்சந்திரன்.
இவரை பரோலில் விடுதலை செய்யக்கோரி அவரது தாயார் ராஜேஸ்வரி, உயர் நீதிமன்ற கிளையில் மனு தாக்கல் செய்துள்ளார்.
இந்த மனு நீதிபதிகள் கல்யாணசுந்தரம், இளங்கோவன் அமர்வில் விசாரணைக்கு வந்தது.
அரசு வழக்கறிஞர் வாதிடுகையில், மனுதாரரின் மகனுக்கு பரோல் வழங்க சிறை அலுவலர் பரிந்துரை செய்யவில்லை. தற்போது கரோனா பரவி வருவதால் பரோலில் விடுதலை செய்ய முடியாது.
சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளதால் அவருக்கு உரிய பாதுகாப்பு வழங்க இயலாது. மேலும் பரோல் விடுமுறையை ஒரு உரிமையாக கோர முடியாது என்றார்.
மனுதாரர் வழக்கறிஞர் திருமுருகன் வாதிடுகையில், மனுதாரருக்கு கண் அறுவை சிகிச்சை செய்ய வேண்டியதுள்ளது. இதனால் ரவிச்சந்திரனை பரோலில் விடுதலை செய்யக்கோரி அளித்த மனு கடந்த ஒரு ஆண்டாக நிலுவையில் உள்ளது. எனவே பரோலில் விடுதலை செய்ய வேண்டும் என்றார்.
இதையடுத்து, மனுதாரரின் கண் அறுவை சிகிச்சைக்காக ரவிச்சந்திரனுக்கு பரோல் கேட்டு அனுப்பிய மனு மீது முடிவெடுக்க எவ்வளவு நாட்கள் தேவை என்பதை தெரிவிக்க உத்தரவிட்டு விசாரணையை மார்ச் 31-க்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.