பூட்டிக் கிடந்த மதுரை கிழக்கு அதிமுக வேட்பாளர் அலுவலகத்தில் ரூ.200 கோடி இருப்பதாக பரவிய தகவல்: தேர்தல் அதிகாரிகள் ஆய்வால் பரபரப்பு

பூட்டிக் கிடந்த மதுரை கிழக்கு அதிமுக வேட்பாளர் அலுவலகத்தில் ரூ.200 கோடி இருப்பதாக பரவிய தகவல்: தேர்தல் அதிகாரிகள் ஆய்வால் பரபரப்பு
Updated on
1 min read

மதுரை கிழக்கு தொகுதி அதிமுக வேட்பாளர் கோபாலகிருஷ்ணனின் பூட்டிக் கிடந்த கட்சி அலுவலகத்தில் ரூ.200 கோடி இருப்பதாக திமுகவினர் குற்றம்சாட்டியதைத் தொடர்ந்து தேர்தல் அதிகாரிகள் அங்கு சென்று ஆய்வு செய்தனர்.

ஆனால், அவர்கள் கூறியபடி ஒன்றும் இல்லாததால் அதிகாரிகள் திரும்பிச் சென்றனர்.

மதுரை கிழக்கு தொகுதியில் அதிமுக வேட்பாளராக முன்னாள் மதுரை எம்.பி கோபாலகிருஷ்ணன் போட்டியிடுகிறார். தல்லாக்குளத்தில் மாநகராட்சி வழங்கிய கட்டிடத்தை அவர் எம்பியாக இருந்தபோது தன்னுடைய அலுவலமாகப் பயன்படுத்தி வந்தார்.

எம்.பி பதவி காலம் நிறைவு அடைந்தபோது இவர், மாநகராட்சியிடம் மாத வாடகை கட்டணம் பேசி தற்போது அதை தன்னுடைய கட்சி அலுவலகமாக பயன்படுத்தி வந்தார்.

கோபாலகிருஷ்ணன், கிழக்கு தொகுதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டது முதல், அவர் தொகுதியில் முகாமிட்டு பிரச்சாரம் செய்து வருகிறார். அதனால், அவர் இந்த கட்சி அலுவலகத்தைப் பயன்படுத்துவதில்லை.

இந்நிலையில் இந்த அலுவலகத்தில் தென் மாவட்டங்களில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்களுக்கு வழங்குவதற்காக அதிமுக கட்சி, பணம் பதுக்கி வைத்திருப்பதாக திமுகவினர் குற்றம்சாட்டினர்.

இந்த தகவல் வேகமாக சமூக வலைதளங்களில் பரவியதால் தேர்தல் அதிகாரிகள், கோபாலகிருஷ்ணன் அலுவலகத்தில் சென்று சோதனை செய்தனர். அங்கு ஒன்றும் சிக்காததால் அதிகாரிகள் திரும்பிச் சென்றனர்.

இதுகுறித்து வேட்பாளர் கோபாலகிருஷ்ணனிடம் கேட்டபோது, ‘‘நீண்ட நாட்களாக அலுவலகம் பூட்டிக்கிடந்ததால் அங்குள்ள வாட்ச்மேனை விட்டு சுத்தம் செய்யச் சொன்னாம்.

அதற்குள் திமுகவினர், ரூ.200 கோடி பணம் இருப்பதாக வதந்தியை கிளப்பிவிட்டுவிட்டனர். நேரடியாக மோதி வெற்றிபெற முடியாமல் இப்படி வதந்திகளையும், பொய்களையும் பரப்பிவிட்டு வெற்றிபெற நினைக்கிறார்கள், ’’ என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in