

தமிழகத்தில் 20 தொகுதிகளில் அல்ல, 234 தொகுதிகளிலுமே பாஜகதான் போட்டியிடுகிறது என்று தமிழகக் காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் கே.எஸ்.அழகிரி விமர்சித்துள்ளார்.
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணியில் காங்கிரஸ், இடதுசாரிகள், மதிமுக, விசிக உள்ளிட்ட கட்சிகள் கூட்டணி அமைத்துக் களம் காண்கின்றன. அதிமுக தலைமையிலான கூட்டணியில் பாஜக, பாமக ஆகிய கட்சிகள் போட்டியிடுகின்றன. அதிமுக கூட்டணியில் 20 தொகுதிகளில் பாஜக போட்டியிடுகிறது.
இந்நிலையில் சென்னையில் காங்கிரஸ் தலைமை அலுவலகமான சத்தியமூர்த்தி பவனில் அக்கட்சியின் மாநிலத் தலைவர் கே.எஸ்.அழகிரி இன்று செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார்.
அப்போது அவர் கூறும்போது, ''மதச்சார்பற்ற கூட்டணிக்கு மக்கள் வாக்களிப்பார்கள் என்றால் தமிழகத்தைத் தமிழகமே ஆளும், ஸ்டாலின் ஆள்வார். அதற்குக் கூட்டணிக் கட்சிகள் துணை நிற்கும். இல்லையெனில் தமிழகத்தை பாஜக ஆளும். அதிமுகவால் ஆள முடியாது.
ஒரு சிலர் சொல்கின்றனர். தமிழகத் தேர்தலில் பாஜக 20 தொகுதிகளில் போட்டியிடுகிறது என்று. அது தவறு. 234 தொகுதிகளுமே பாஜகவின் தொகுதிகள்தான்'' என்று கே.எஸ்.அழகிரி தெரிவித்தார்.
முன்னதாக, ''இந்தத் தேர்தல் இரண்டு கட்சிகளுக்கான தேர்தல் அல்ல. இரண்டு தத்துவங்களுக்கு இடையேயான போட்டி. இந்தத் தேர்தலில் நாம் வெற்றிபெற வேண்டும் என்பது ஒரு ஆட்சி போய் இன்னொரு ஆட்சி வருவதல்ல. ஒரு தத்துவம் வீழ்த்தப்பட்டு இன்னொரு தத்துவம் எழுந்ததாகப் பொருள்படும் என ராகுல் காந்தி சொன்னதை மனதில் வைத்துச் செயல்பட வேண்டும்'' என்று கே.எஸ்.அழகிரி தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.