Last Updated : 19 Mar, 2021 04:00 PM

 

Published : 19 Mar 2021 04:00 PM
Last Updated : 19 Mar 2021 04:00 PM

புதுச்சேரியில் விநோதம்; மனுத்தாக்கல் முடிந்த பிறகு வேட்பாளர் பட்டியலை வெளியிட்ட ரங்கசாமி

மனுத்தாக்கல் முடிந்த பிறகு வேட்பாளர் பட்டியலை என்.ஆர்.காங்கிரஸ் தலைவர் ரங்கசாமி இன்று வெளியிட்டுள்ளார்.

காங்கிரஸ் கட்சியில் இருந்து பிரிந்து வந்து 2011-ம் ஆண்டு பிப்ரவரி 7-ம் தேதியன்று அகில இந்திய என்.ஆர்.காங்கிரஸ் கட்சியைத் தொடங்கினார் ரங்கசாமி. கட்சி தொடங்கிய சில மாதங்களிலேயே சட்டப்பேரவைத் தேர்தலைச் சந்தித்து முதல்வரானார் ரங்கசாமி.

பத்து ஆண்டுகளாகியும் மாநில அளவிலான நிர்வாகிகளைத் தவிர மாவட்டம் மற்றும் தொகுதி அளவிலான நிர்வாகிகள், விவசாய அணி, இளைஞரணி, மகளிர் அணி எவ்வித அணிகளுக்கும் பொறுப்பாளர்கள் என்.ஆர்.காங்கிரஸில் நியமிக்கப்படவில்லை. பெரிய கட்சிகளைப் போல் புதிய உறுப்பினர்கள் சேர்க்கை, அடையாள அட்டை தருவது போன்ற பணிகள் கூட நடக்கவில்லை.

இம்முறை பாஜகவுடன் கூட்டணி அமைத்த ரங்கசாமி, 16 தொகுதிகளில் வேட்பாளர்கள் பெயரைக் கூட அறிவிக்கவில்லை. புதுச்சேரியில் சட்டப்பேரவைத் தேர்தலில் அனைத்துக் கட்சிகளும் தொகுப் பங்கீடு முடித்து வேட்பாளர்களை அறிவித்து மனுத்தாக்கல் செய்துள்ளனர். வேட்பாளர் அறிவிப்பை ரங்கசாமியிடம் கேட்டபோதெல்லாம் சிரிப்பை மட்டும் பதிலாகத் தந்தார். என்.ஆர்.காங்கிரஸ் தரப்பில் பலரும் வேட்பு மனுக்களைத் தாக்கல் செய்தனர். பலர் கூட்டணிக் கட்சிகளான பாஜக, அதிமுக போட்டியிடும் தொகுதிகளிலும் மனுத்தாக்கல் செய்துள்ளனர்.

இந்நிலையில், வேட்புமனுத் தாக்கல் இன்று (மார்ச் 19) நிறைவடைந்தது. அதைத் தொடர்ந்து, என்.ஆர்.காங்கிரஸ் வேட்பாளர் பட்டியலை ரங்கசாமி வெளியிட்டுள்ளார்.

அதிகாரபூர்வ வேட்பாளர் விவரம்:

தட்டாஞ்சாவடி, ஏனாம் - ரங்கசாமி, திருபுவனை - கோபிகா, மங்கலம் - ஜெயகுமார், உழவர்கரை - பன்னீர்செல்வம், கதிர்காமம் - ரமேஷ், இந்திராநகர் - ஆறுமுகம், ராஜ்பவன் - லட்சுமி நாராயணன், அரியாங்குப்பம் - தட்சிணாமூர்த்தி, ஏம்பலம் - லட்சுமி காந்தன், நெட்டபாக்கம் - ராஜவேலு, பாகூர் - தனவேலு, நெடுங்காடு - சந்திர பிரியங்கா, காரைக்கால் வடக்கு - திருமுருகன், மாஹே - அப்துல் ரகுமான்.

தேர்தலின்போது மனுத்தாக்கல் முடித்து வேட்பாளர் பட்டியலை வெளியிட்ட ஒரே கட்சி என்.ஆர்.காங்கிரஸ்தான் என்று அரசியல் வட்டாரங்களில் குறிப்பிடுகின்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x