

அற்புதமாக வெற்றிநடை போடும் தமிழகத்தை மேலும் வெற்றிநடை போட வைக்க எடப்பாடி பழனிசாமி மீண்டும் ஆட்சி அமைப்பார் என்று அரவக்குறிச்சி தொகுதி பாஜக வேட்பாளரும், முன்னாள் ஐபிஎஸ் அதிகாரியுமான அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
அரவக்குறிச்சி பாஜக வேட்பாளர் அண்ணாமலை இன்று தொண்டர்கள் புடைசூழ சைக்கிளில் சென்று வேட்புமனுத் தாக்கல் செய்தார். அதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், ''அதிமுக கூட்டணி 200 தொகுதிகளில் வெற்றி பெறும். அரவக்குறிச்சி தொகுதி அதிமுக- பாஜக கூட்டணிக்குத் திருப்புமுனையாக இருக்கும்.
ஒரு வாரமாக நாங்கள் பார்த்துக் கொண்டிருக்கிறோம். செந்தில் பாலாஜியின் பேச்சின் அராஜகம், காவல் துறையைத் திட்டுவது, மரியாதை இல்லாமல் நடத்துவது, நாங்கள் ஆட்சிக்கு வந்தால் எங்கு வேண்டுமானாலும் போய், எதை வேண்டும் எடுத்துக்கொள்வோம் என்று சொல்வது, ஏப்ரல் 6-ம் தேதி நாங்கள் யார் என்று காட்டுவோம் என்று பேசுவது ஆகியவற்றையெல்லாம் சாதாரண மனிதர்கள் ரசிக்கவில்லை.
திமுக நண்பர்கள் சொல்வதை ஆணவத்தின் உச்சமாகவே பொதுமக்கள் பார்க்கிறார்கள். இவை அனைத்துக்கும் அதிமுகவும் பாஜகவும் தேர்தல் தினமான ஏப்ரல் 6 அன்றும் மே 2-ம் தேதியும் முடிவு கட்டும். அற்புதமாக வெற்றிநடை போடும் தமிழகத்தை மேலும் வெற்றிநடை போட வைக்க எடப்பாடி பழனிசாமி மீண்டும் ஆட்சி அமைப்பார்'' என்று அண்ணாமலை தெரிவித்தார்.