அமைச்சர் வேலுமணிதான் குண்டர்களை வைத்துள்ளார்: கார்த்திகேய சிவசேனாபதி பதிலடி

அமைச்சர் வேலுமணிதான் குண்டர்களை வைத்துள்ளார்: கார்த்திகேய சிவசேனாபதி பதிலடி
Updated on
1 min read

அமைச்சர் வேலுமணிதான் குண்டர்களை வைத்துள்ளதாகவும், தங்களிடம் இருப்பதெல்லாம் மானமும் மரியாதையும்தான் என்றும் தொண்டாமுத்தூர் தொகுதி திமுக வேட்பாளரும், திமுக சுற்றுச்சூழல் அணியின் மாநிலச் செயலாளருமான கார்த்திகேய சிவசேனாபதி தெரிவித்துள்ளார்.

கோவை ஆர்.எஸ்.புரம் பகுதியில் நேற்று நடைபெற்ற அதிமுக தேர்தல் அலுவலகத் திறப்பு விழாவின்போது பேசிய நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்புத் திட்டங்கள் செயலாக்கத் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, ''ஐபேக் நிறுவனத்தினர் ரவுடிகள், குண்டர்கள் என சுமார் 3 ஆயிரம் பேரைத் தொண்டாமுத்தூரில் களமிறக்கியுள்ளனர். அதிமுகவினரிடம் வம்பிழுத்து, பிரச்சினைகளை உருவாக்கி, தொண்டாமுத்தூர் தொகுதியில் தேர்தலை நிறுத்த திமுக முயல்கிறது. எனவே, அதிமுகவினர் பொறுமையாக இருக்க வேண்டும்.

குறுக்குவழியில் மு.க.ஸ்டாலின் முதல்வராவதைத் தடுத்தது, இரட்டை இலையை மீட்டது நான்தான் என்பதால், ஸ்டாலின் என் மீது கோபத்தில் உள்ளார்'' என்று வேலுமணி கூறியிருந்தார்.

இதற்கு இன்று செய்தியாளர்களிடம் பதிலளித்த தொண்டாமுத்தூர் தொகுதி திமுக வேட்பாளர் கார்த்திகேய சிவசேனாபதி, ''தொண்டாமுத்தூர் தொகுதியில் அராஜகம் செய்யக்கூடிய, குண்டர்கள் தொடர்பான காரியங்களைச் செய்யக்கூடிய ஒரே நபர் அமைச்சர் எஸ்.பி.வேலுமணிதான். எங்களிடம் எந்த குண்டர்களும் கிடையாது. அவரிடம் இருக்கும் அளவுக்குப் பணமும் கிடையாது.

எங்களிடம் இருப்பதெல்லாம் மானமும் மரியாதையும் மட்டும்தான். அதேபோல மக்களுக்கு வேலை செய்ய வேண்டும் என்ற எண்ணமும் இருக்கிறது. அவரிடம் இருப்பதைப் போல ஆள் பலமோ, காவல்துறையின் பலமோ, பண பலமோ எங்களிடம் கிடையாது'' என்று தெரிவித்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in