வேட்புமனுத் தாக்கலுக்கு ஒரே மாட்டு வண்டியில் புறப்பட்ட பாமக வேட்பாளர்கள்: தேர்தல் துறை அதிகாரிகள் மீது புகார்

வேட்புமனுத் தாக்கலுக்கு ஒரே மாட்டு வண்டியில் புறப்பட்ட பாமக வேட்பாளர்கள்: தேர்தல் துறை அதிகாரிகள் மீது புகார்
Updated on
1 min read

வேட்புமனுத் தாக்கலுக்கு ஒரே மாட்டு வண்டியில் பாமக வேட்பாளர்கள் இன்று புறப்பட்டனர். அத்துடன் மனுத்தாக்கல் படிவம் பெற வருவோரை அதிகாரிகள் அலட்சியப்படுத்துவதாக பாமக மாநில அமைப்பாளர் தன்ராஜ் குற்றம் சாட்டினார்.

புதுச்சேரியில் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் பாமக போட்டியிடுவதாக இருந்தது. ஆனால், பாஜக தொகுதிகளை வழங்கவில்லை. இதனால் அதிருப்தி அடைந்த பாமக, புதுச்சேரி, காரைக்காலில் 28 தொகுதிகளில் தனித்துப் போட்டியிடுவதாகத் தெரிவித்தது. பாஜக தரப்புக்கு கெடுவும் விதிக்கப்பட்டது. ஆனால், பாஜக கண்டுகொள்ளவில்லை.

இதையடுத்து மொத்தமுள்ள 30 தொகுதிகளில் 15 தொகுதிகளில் பாமக வேட்பாளர்கள் களம் இறங்குவதாகக் குறிப்பிட்டனர். இந்நிலையில் இன்று பாமக வேட்பாளர்கள்10 பேர் வேட்புமனுத் தாக்கலுக்காக ஒன்றாக வன்னியர் சங்கக் கட்டிடத்தில் இருந்து புறப்பட்டனர்.

அப்போது பாமக மாநில அமைப்பாளர் தன்ராஜ் அவர்களை அறிமுகப்படுத்திவிட்டுக் கூறுகையில், "புதுச்சேரி தேர்தல் துறை பாரபட்சமாகச் செயல்படுகிறது. பாஜக, என்.ஆர்.காங்கிரஸ் கட்சிகளுக்குத்தான் முக்கியத்துவம் அளிக்கிறது. மனுத்தாக்கல் தொடர்பாகப் படிவம் பெறச் செல்லும் பலரையும், பாமக போன்ற கட்சிகளையும் அவமதித்து, அலட்சியப்படுத்துகின்றனர். புதுவையில் நேர்மையான தேர்தல் நடைபெறுமா என்று சந்தேகமாக உள்ளது" என்று குறிப்பிட்டார்.

சிறிது தொலைவுக்குப் பிறகு தனித்தனி வாகனத்தில் வேட்பாளர்கள் மனுத்தாக்கல் செய்யச் சென்றனர். தற்போது 10 பேர் இங்கிருந்து புறப்பட்டதாகவும், மீதமுள்ள 5 பேர் விரைவில் மனுத்தாக்கல் செய்ய உள்ளதாகவும் தெரிவித்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in