Published : 19 Mar 2021 12:32 PM
Last Updated : 19 Mar 2021 12:32 PM

ஊர்ந்து செல்ல நான் என்ன பாம்பா? பல்லியா? மனுஷனய்யா: முதல்வர் பழனிசாமி ஆவேசம் 

ஊர்ந்து சென்று முதல்வரானார் என்கிறார்கள். ஊர்ந்து செல்ல நானென்ன பாம்பா? பல்லியா? மனுஷனய்யா என்று முதல்வர் பழனிசாமி ஆவேசமாகப் பேசினார். மேலும், விவசாயிகள் பிரச்சினை பற்றி ஸ்டாலினுக்குச் சிந்திக்கவும் தெரியாது. சிந்தித்தால் அவருக்குப் பேசவும் தெரியாது என்றும் அவர் விமர்சித்தார்.

கடலூர் புவனகிரி சட்டப்பேரவைத் தொகுதி அதிமுக வேட்பாளர் அருண்மொழி தேவனை ஆதரித்து முதல்வர் பழனிசாமி பிரச்சாரம் செய்தார்.

அப்போது அவர் பேசியதாவது.

''அதிமுக அரசைப் பற்றி விமர்சனம் செய்வது மட்டுமே ஸ்டாலின் வேலை. டெல்டா மாவட்டத்தில் ஹைட்ரோகார்பன் திட்டத்தைக் கொண்டுவந்தது திமுக. விவசாயிகள் பாதிக்கப்படுவார்கள் என்று தெரிந்தே கையெழுத்துப் போட்டார். அப்புறம் எதிர்ப்பு வந்ததும் பல்டி அடித்து அவரே எதிர்க்கிறார். கொண்டுவந்ததும் ஸ்டாலின். எதிர்த்துப் போராட்டம் நடத்துவதும் ஸ்டாலின்.

பழைய காலம் மாதிரி இங்குள்ள விவசாயிகளை ஏமாற்ற முடியாது. இவர்கள் விஞ்ஞான முறையில் இன்று விவசாயம் செய்யும் அளவுக்கு வளர்ந்துள்ளார்கள். இந்தப் பிரச்சினை என்னிடம் வந்தபோது நிபுணர்களைக் கலந்து பேசி, அதற்கு ஒரு சட்டம் இயற்றி இன்றைக்கு இந்தப் பகுதியைப் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவித்தோம்.

இன்றைக்கு யாரும் உங்கள் நிலத்தில் கைவைக்க முடியாது. அப்படிப்பட்ட சட்டத்தைக் கொடுத்துள்ளோம். காரணம் நான் ஒரு விவசாயி. அதே விவசாயிக்கு என்ன கஷ்டம் என்பதை உணர்ந்தவன் நான்.

விவசாயிகள் பிரச்சினை பற்றி ஸ்டாலினுக்குச் சிந்திக்கவும் தெரியாது. சிந்தித்தால் அவருக்குப் பேசவும் தெரியாது. வயலைப் பார்க்க வந்தவர் வயலில் இறங்கி நடந்துபோக கான்கிரீட் போட்டுள்ளார்கள். அதில் நடந்து போகிறார். எங்காவது இது நடக்குமா?

நான் திருவாரூர் போகும்போது பெண்கள் நடவு செய்து கொண்டிருந்தார்கள். அவரிடம் பேசும்போது, அங்குள்ள பெண்கள் நடவு தெரியுமா என்று கேட்டார்கள். நான் வயலில் இறங்கி நடவு செய்தேன். வயலில் இறங்கி நடக்க விவசாயிக்கு மட்டும்தான் தெரியும். நான் பாட்டன், அப்பன் காலத்திலிருந்து இப்போதும் விவசாயம்தான் செய்கிறேன்.

முதல்வர் பதவியை யாராவது ஊர்ந்துபோய் வாங்குவார்களா? ஊர்ந்து போவதற்குப் பாம்பா? பல்லியா?மனுஷனய்யா. ஏனென்றால் எரிச்சல். அவரால் தாங்க முடியவில்லை. ஜெயலலிதா மறைந்து போய்விட்டார். எப்படியும் கட்சி உடைந்துவிடும், ஆட்சி போய்விடும். முதல்வர் ஆகலாம் என்று எண்ணியிருந்தார். இப்படி ஒரு விவசாயி வருவான் என்று அவருக்குத் தெரியாது.

ஆண்டவனாகப் பார்த்து இங்குள்ள மக்களின் அருளாசியோடு இந்தப் பதவியை ஏற்றேன். ஸ்டாலின் அவர்களே. ஊர்ந்தும் போகவில்லை, தவழ்ந்தும் போகவில்லை. நடந்துபோய்தான் பதவி ஏற்றேன்''.

இவ்வாறு முதல்வர் பழனிசாமி பேசினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x