

இந்தியாவில் ‘கோவிஷீல்டு’, ‘கோவேக்ஸின்’ எனும் 2 தடுப்பூசிகள் புழக்கத்தில் உள்ளன. ‘கோவிஷீல்டு’ தடுப்பூசியில் சிம்பன்ஸி குரங்கை பாதிக்கும் அடினோவைரஸில் மரபணுவை மாற்றி, அதனுள் வீரியம் இழந்த ‘நாவல்கரோனா' வைரஸின் ‘கூர்ப்புரத’த்தைச் செலுத்திவிடுகின்றனர். இந்த வைரஸால் மனித உடலுக்குள் பிரதி எடுத்து வளர்ச்சியடைய முடியாது. ‘கோவேக்ஸின்’ தடுப்பூசியில் இறந்த நிலையில் உள்ள ‘நாவல்கரோனா' வைரஸைப் பயன்படுத்துகின்றனர். இந்த வைரஸாலும் மனிதஉடலுக்குள் வளர்ச்சியடைய முடியாது.
மாடர்னா, பைசர் நிறுவனங்கள்தயாரித்துள்ள கரோனா தடுப்பூசிகளில் நாவல் கரோனா வைரஸ்‘எம்ஆர்என்ஏ’ பயன்படுத்தியுள்ளனர். இதனாலும் மனித உடலுக்குள்சென்றதும் கரோனா வைரஸாக உருவாக முடியாது. எனவே தடுப்பூசிபோட்டுக் கொண்டவர்கள் ரத்ததானம் செய்வதால் அந்த ரத்தத்தைப் பெற்றுக்கொண்டவருக்கு கரோனா தொற்று ஏற்பட்டுவிடுமோ என்று பயப்பட வேண்டியதில்லை. எப்போதும்போல் ரத்த தானம் செய்யலாம். ரத்தம் அளித்த பிறகு கொடையாளரின் உடலில் உருவாகும் புதிய ரத்தத்திலும் கரோனா எதிரணுக்கள் உற்பத்தியாகிவிடும்.
உலக நடைமுறை
சிலருக்கு தடுப்பூசி போட்டுக்கொண்ட ஒரு வாரத்துக்குள் மிதமான காய்ச்சல், உடல் வலி, தலைவலி, அசதி போன்ற சிறிய அளவிலான தொல்லைகள் ஏற்படக் கூடும். அப்போது ரத்த தானம் செய்யக்கூடாது. ஒரு வாரம் கழித்து ரத்ததானம் செய்யலாம் என்ற வழிமுறைஉலக அளவில் பின்பற்றப்படுகிறது.
இந்திய நடைமுறை
இந்தியாவில் ரத்த தானம் செய்ய, உலக நடைமுறையிலிருந்து ஒருமாற்றத்தைக் கொண்டு வந்துள்ளனர். ‘கோவிஷீல்டு’, ‘கோவேக்ஸின்’இரண்டில் எதுவானாலும் 2-ம்தவணை தடுப்பூசி போட்டுக்கொண்ட பிறகு 28 நாட்கள் கழித்து ரத்த தானம் செய்யலாம் என்று ‘தேசிய ரத்தமேற்றும் கழகம்’ (NBTC)அறிவித்துள்ளது.
ஒருவேளை கரோனா தடுப்பூசிபோட்டுக்கொண்டவரின் ரத்தத்தைப் பெற்றுக் கொள்பவருக்கு ‘சுயத்தடுப்பாற்றல் சீர்குலைவு’ (Auto immune disorder) இருந்தால், புதிதாக செலுத்தப்பட்ட ரத்தத்தில் உள்ள கரோனா எதிரணுக்கள் அந்தநோயுள்ளவரின் உடலையும் பாதிக்க வாய்ப்புள்ளது என்பதுதான்காரணம். 28 நாட்கள் கழித்து ரத்ததானம் செய்தால் அந்த எதிரணுக்கள் பயனாளி உடலுக்குப் பாதகம் செய்யாது என்று ஒரு மருத்துவக் கணிப்பு உள்ளது. இதைக் கருத்தில் கொண்டும் மிக அரிதாக நிகழும்இந்தப் பாதிப்பைக் கவனத்தில் கொண்டும் 28 நாட்கள் கழித்து ரத்த தானம் செய்யும் வழிமுறையை இந்தியாவில் பின்பற்ற ஆலோசனை வழங்கியுள்ளனர்.
‘தேற்றாளர் ரத்தத் திரவம்’ தானம் செய்யலாமா?
கரோனா தொற்றாளர்களுக்கு ‘தேற்றாளர் ரத்தத் திரவம்’ (Convalescent plasma) வழங்கப்படுவது ஒரு சிகிச்சை முறையாக உள்ளது. இவர்களுக்கு கரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களின் ரத்தத் திரவத்தை எடுத்து சிகிச்சைக்குப் பயன்படுத்த முடியாது.
தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களின் ரத்தத்தில் உருவாகும் எதிரணுக்கள் கரோனாவுக்கு எதிரான தடுப்பாற்றலைத் தரும். அதாவது, கரோனா வைரஸ்கள் உடலுக்குள் நுழையும்போதே அவற்றை கண்டறிந்து எதிர்த்துப் போராடி கரோனாவை வெற்றிகொள்ளும். ஆனால், கரோனா தொற்றாளர்கள் உடலில் ஏற்கெனவே கரோனா வைரஸ்கள் குடிபுகுந்திருக்கும். அவற்றுக்கு எதிராக தடுப்பூசி மருந்துகள் போராட முடியாது.
தடுப்பூசி என்பது நோயைக் குணப்படுத்தும் மருந்து அல்ல; நோய் வருவதை தடுக்கும் மருந்து.ஆகவே, கரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டவர்கள் ‘தேற்றாளர் ரத்தத் திரவ’ தானம் செய்ய முடியாது.
ரத்த வங்கிகளின் பிரச்சினைக்கு தீர்வு என்ன?
இரண்டாம் தவணை தடுப்பூசி போட்டுக்கொண்ட பிறகு 28 நாட்கள் கழித்து ரத்த தானம் செய்யலாம் எனும் அறிவிப்பு இந்திய ரத்த வங்கிகளுக்குப் பிரச்சினையாகி உள்ளது. ஏற்கெனவே கரோனா தடுப்பூசி இரண்டாம் தவணைக்கு 28 நாட்கள் இடைவெளி தேவைப்படுகிறது. இரண்டாம் தவணையைப் போட்டுக்கொண்ட பிறகு 28 நாட்கள் கழித்து ரத்த தானம் செய்யலாம் என்றால், மொத்தத்தில் 56 நாட்கள் காத்திருக்க வேண்டும்.
கரோனா பாதிப்பால் ரத்த தானம் செய்வோர் எண்ணிக்கை குறைந்து வரும் நிலையில் இந்த அறிவிப்பு ரத்த வங்கிகளின் நிலைமையை இன்னும் மோசமாக்கிவிடும். தகுதியான கொடையாளர்கள் முதலில் ரத்ததானம் செய்துவிட்டு, அடுத்ததாக கரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டால், இந்த நிலைமையைச் சமாளிக்க முடியும்.
கட்டுரையாளர்:பொதுநல மருத்துவர்.
தொடர்புக்கு: gganesan95@gmail.com