தொகுதிக்குள் முடங்கிய தமிழக பாஜக தலைவர்கள்: வெளிமாநிலத் தலைவர்களை நம்பியிருக்கும் வேட்பாளர்கள்

தொகுதிக்குள் முடங்கிய தமிழக பாஜக தலைவர்கள்: வெளிமாநிலத் தலைவர்களை நம்பியிருக்கும் வேட்பாளர்கள்
Updated on
1 min read

சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக கூட்டணியில் 20 தொகுதிகளில் பாஜக போட்டியிடுகிறது. தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் - தாராபுரம் (தனி), மகளிரணி தேசியத் தலைவர் வானதி சீனிவாசன் - கோவை தெற்கு, மூத்த தலைவர் எச்.ராஜா - காரைக்குடி, மாநில துணைத் தலைவர் அண்ணாமலை - அரவக்குறிச்சி தொகுதிகளில் போட்டியிடுகின்றனர். முன்னாள் மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் - குமரி மக்களவைத் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடுகிறார்.

இவர்கள் தங்கள் தொகுதியைவிட்டு வெளியே வராமல் இருப்பதால் அக்கட்சியின் மற்ற வேட்பாளர்கள் பெரும் சிரமத்துக்கு ஆளாகியுள்ளனர். தமிழகம் முழுவதும் பிரச்சாரம் செய்வார் என்று எதிர்பார்க்கப்பட்ட குஷ்பு,சென்னை ஆயிரம் விளக்கு தொகுதியில் போட்டியிடுவதால் அவரும் தொகுதியைவிட்டு வெளியே வருவதில்லை.

இதனால் பாஜக வேட்பாளர்கள் கட்சி மேலிடத்திடம் தலைவர்கள் தொகுதிகள் அல்லாத மற்ற தொகுதிகளிலும் கவனம் செலுத்த வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளனர். அதனைத் தொடர்ந்து பாஜக போட்டியிடும் 20 தொகுதிகளுக்கும் அண்டை மாநிலங்களான கர்நாடகம், தெலங்கானா, ஆந்திராவைச் சேர்ந்த நிர்வாகிகள் பொறுப்பாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

தமிழகத்துக்கென பொறுப்பாளர்களாக நியமிக்கப்பட்டுள்ள மத்திய இணை அமைச்சர்கள் கிஷண் ரெட்டி, வி.கே.சிங் தவிர, மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், பாஜக இளைஞரணிதேசியத் தலைவர் தேஜஸ்வி சூர்யா ஆகியோரை தமிழகத்தில் கவனம் செலுத்துமாறு பாஜக மேலிடம் கேட்டுக் கொண்டுள்ளதாக அக்கட்சியினர் தெரிவிக்கின்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in