தலைமன்னார் - தனுஷ்கோடி இடையே 30 கி.மீ. தூரம் கொண்ட பாக் ஜலசந்தியை நீந்திக் கடக்கும் சியாமளா: அனிமேஷன் பட இயக்குநரின் சாதனை முயற்சி

பாக் ஜலசந்தியை நீந்திக் கடப்பதற்காக ராமேசுவரத்தில் இருந்து படகில் புறப்பட்டுச் செல்வதற்கு முன்பு வெற்றிச் சின்னம் காட்டுகிறார் கோலி சியாமளா.
பாக் ஜலசந்தியை நீந்திக் கடப்பதற்காக ராமேசுவரத்தில் இருந்து படகில் புறப்பட்டுச் செல்வதற்கு முன்பு வெற்றிச் சின்னம் காட்டுகிறார் கோலி சியாமளா.
Updated on
1 min read

தலைமன்னாரில் இருந்து தனுஷ்கோடி வரையிலான சுமார் 30 கி.மீ. தூரம் கொண்ட பாக் ஜலசந்தி கடற்பகுதியை ஹைதராபாத்தை சேர்ந்த நீச்சல் வீராங்கனை கோலி சியாமளா நாளை நீந்திக் கடக்க உள்ளார்.

தமிழகத்தையும், இலங்கையையும் பாக் ஜலசந்தி கடற்பகுதி பிரிக்கிறது. ராமேசுவரம் தீவும், அதை தொடர்ந்துள்ள மணல் திட்டுக்களான ராமர் பாலமும் பாக்ஜலசந்தி கடற்பகுதியை மன்னார் வளைகுடாவில் இருந்து பிரிக்கிறது. தமிழகத்திலேயே மிகவும் ஆழம் குறைந்த, அதே சமயம் பாறைகளும் ஆபத்தான ஜெல்லி மீன்களும் நிறைந்த கடற்பகுதி இது.

பாக் ஜலசந்தி கடற்பகுதியை இலங்கை வல்வெட்டித்துறையை சேர்ந்த நவரத்தினசாமி என்ற தமிழர் முதன்முதலாக 1954-ம் ஆண்டு நீந்திக் கடந்தார். தொடர்ந்து 1966-ல்கொல்கத்தாவை சேர்ந்த மிகிர்சென்என்பவர் பாக் ஜலசந்தியை தலைமன்னாரில் இருந்து தனுஷ்கோடி வரை நீந்திக் கடந்தார். வல்வெட்டித்துறையை சேர்ந்த நீச்சல் வீரரான குமார் ஆனந்தன் 1971-ல்தலைமன்னாரில் இருந்து தனுஷ்கோடிக்கு நீந்தி வந்து, மீண்டும் தலைமன்னாருக்கு 51 மணி நேரத்தில் நீந்திச் சென்று சாதனை படைத்தார். 2019-ல் தேனி மாவட்டம் அல்லிநகரத்தை சேர்ந்த ஆர்.ஜெய் ஜஸ்வந்த் என்ற 10 வயது பள்ளி மாணவர் பாக் ஜலசந்தியை நீந்திக் கடந்தார். அதுபோல, கடந்த 2020 பிப்ரவரியில் அமெரிக்காவை சேர்ந்த எடி ஹு (45) என்பவர் முதல் பெண்ணாக பாக் ஜலசந்தி கடற்பகுதியை நீந்திக் கடந்தார்.

இந்நிலையில், பல்வேறு நீச்சல்போட்டிகளில் சாதனை படைத்ததெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தை சார்ந்த கோலி சியாமளா (47), தலைமன்னாரில் இருந்து தனுஷ்கோடி வரையிலான சுமார் 30 கி.மீ. தூரம் கொண்ட பாக் ஜலசந்தி கடற்பகுதியை நீந்திக் கடக்க உள்ளார். இதற்காக ராமேசுவரம் சங்குமால் கடற்கரையில் இருந்து 2 படகுகளில் கோலி சியாமளா, அவரது பயிற்சியாளர் மற்றும் மீனவர்கள் உள்ளிட்ட 13 பேர் தலைமன்னாருக்கு புறப்பட்டு சென்றனர்.

தலைமன்னாரில் 20-ம் தேதி(நாளை) அதிகாலை 3 மணிக்கு நீந்ததொடங்கும் கோலி சியாமளா, பிற்பகல் 2 மணி அளவில் தனுஷ்கோடி அரிச்சல் முனையை வந்தடைவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதன்மூலம், பாக் ஜலசந்தி கடற்பகுதியை நீந்திக் கடந்த முதல் இந்தியப் பெண் என்ற பெருமையை கோலி சியாமளா பெறுவார். இவர் அனிமேஷன் படங்களின் இயக்குநர் என்பது குறிப்பிடத்தக்கது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in